கோயம்பேட்டில் இருந்து சென்ற 7,500 தொழிலாளர்கள்: மாநிலம் முழுவதும் பரவும் ஆபத்து
- IndiaGlitz, [Monday,May 04 2020]
சென்னை கோயம்பேட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 7,500 தொழிலாளர்கள் சென்றுள்ளதாகவும் அவர்களால் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவு அபாயம் இருப்பதாகவும் வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக சமூக விலகலை பின்பற்றாமல், மாஸ்க் கூட அணியாமல் பலர் காய்கறிகளை விற்பனை செய்தும் வாங்கியும் வந்த நிலையில் கோயம்பேடு சந்தையால் ஏற்பட்ட கொரோனாவின் பாதிப்பு நேற்று 100ஐ தாண்டியது. மேலும் கோயம்பேடு சந்தை மூலம் விழுப்புரத்தில் இன்று புதிதாக 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் 20 பேர்களும் கோயம்பேட்டில் இருந்து காய்கறி வாங்கிவந்து விழுப்புரத்தில் விற்பனை செய்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் கோயம்பேட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்ற 7,500 தொழிலாளர்களை கண்டறிய முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும், கோயம்பேட்டில் இருந்து சென்றவர்களின் தகவல்களை மாவட்ட நிர்வாகம் வாங்கி ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர்களால் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து இருப்பதால் உடனடியாக இந்த 7500 தொழிலாளர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.