பீட்சா டெலிவரி செய்தவருக்கு கொரோனா: ஏரியாவையே மடக்கிய காவல்துறை
- IndiaGlitz, [Thursday,April 16 2020]
டெல்லியில் பீட்சா டெலிவரி செய்த நபர் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் வசித்த பகுதி மற்றும் அவர் பீட்சா டெலிவரி செய்த பகுதி முழுவதையும் காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்த பீட்சா டெலிவரி செய்த நபர் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் பீட்சா டெலிவரி செய்த 72 வீடுகளில் உள்ள பொதுமக்களை தனித்து இருக்க காவல் துறை அறிவுறுத்தியது. தற்போது 72 வீடுகளில் உள்ள குடும்பத்தினர் அனைவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இருப்பினும் 72 வீடுகளில் உள்ளவர்கள் யாருக்கும் இதுவரை கொரோனா அறிகுறியே தெரியவில்லை என்றும் அதனால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படவில்லை என்றும் ஒருவேளை அவர்களுக்கு கொரோனா அறிகுறி தெரிந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் டெல்லி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பீட்சா டெலிவரி செய்த நபரின் வீட்டு அருகில் உள்ள நபர்களும் தனிமைப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியாவிலேயே டெல்லி மாநிலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.