கொரோனா காலத்திலும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.7,043 கோடி கடன்!!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!!
- IndiaGlitz, [Saturday,July 25 2020]
தமிழக அரசு கொரோனா பேரிடர் காலத்தில் முடங்கிக் கிடக்கும் தொழில் அமைப்புகளை மேம்படுத்தும் வகையிலான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில் மேம்பாடு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து வங்கி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனையில் ஈடுபட்டார் என்றும் அதன் மூலம் தமிழகத்தில் உள்ள பல்வேறு சிறு நிறுவனங்களுக்கு ரூ. 7,043 கோடி கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் ஊரகத் தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் உள்ள 3,53,085 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தற்போது ரூ. 7,043 கோடி கடன் வழங்கப் பட்டுள்ளது. இத்தொகை கொரோனா காலத்தில் முடங்கிக் கிடந்த பல தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் வழங்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்து இருக்கிறார். வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குட் பட்ட பகுதியில் ரூ. 1.80 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் பெஞ்சமின் தற்போது தமிழக பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் பல திட்டப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.