தமிழகம் முழுவதும் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்: தமிழக அரசு அறிவிப்பு
- IndiaGlitz, [Monday,June 29 2020]
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஐந்தாம் கட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடைவதை அடுத்து மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற அச்சம் அனைவர் மனதிலும் இருந்தது. ஆனால் மீண்டும் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை செய்யப்படவில்லை என இன்றைய ஆலோசனை கூட்டம் முடிந்தபின்னர் மருத்துவர் குழுவினர் தெரிவித்தனர்.
இருப்பினும் கொரோனா வைரஸ் அதிகம் பரவும் பகுதிகளை மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் என அறிவித்து அந்த பகுதிகளுக்கு மட்டும் தீவிர கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தும் என்று கூறப்பட்டது. இதன்படி தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு.
அதிகபட்சமாக சென்னையில் 104, சேலம்- 84, திருவண்ணாமலை- 72, மதுரை-57, கடலூர்-64 என மொத்தம் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, நாமக்கல், தருமபுரி, திருச்சி, வேலூர், பெரம்பலூர், கரூர், அரியலூர் மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த 9ஆம் தேதி தமிழகத்தில் 201 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது சுமார் 500 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.