முகாமிலிருந்து கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு கடிதம் எழுதிய சிறுவன்..! உலகமெங்கும் இருந்து குவிந்த பரிசுகள்.
Send us your feedback to audioarticles@vaarta.com
டெக்ஸாஸில் 7 வயது சிறுவன் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு எழுதிய கடிதம்தான் நெட்டிசன்கள் பலரை தற்போது நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸில், உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் பாதுகாப்பு முகாம் ஒன்று உள்ளது. பிளேக், இந்த முகாமில் வசித்துவரும் ஏழு வயது சிறுவன், கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்து கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில், `` அன்புள்ள சாண்டா, நாங்கள் எங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் இருந்தது. என்னுடைய அப்பா சரியில்லாதவர். நாங்களே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியிருந்தது. அப்பா, அவருக்குத் தேவையான எல்லாவற்றையும் பெற்றார். அம்மா, `இது நாம் வெளியேற வேண்டிய நேரம்; பயப்படத் தேவையில்லாத பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப் போகிறேன்’ என்றும் கூறினார்” என அச்சிறுவன் எழுதியிருந்தார்.
``எனக்கு பதற்றமாக இருக்கிறது” என கியூட் கையெழுத்தில் தொடரும் கடிதத்தில், ``நான் மற்ற குழந்தைகளிடம் பேச விரும்பவில்லை. நீங்கள் இந்த கிறிஸ்துமஸுக்கு வருவீர்களா? எங்களிடம் எதுவுமே இல்லை” என்று எழுதியுள்ளார். மேலும், காம்பஸ், டிக்ஷனரி, வாட்ச் ஆகியவை வேண்டுமென்றும் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு பிளேக் கோரிக்கைவிடுத்துள்ளார். ``எனக்கு மிக மிக நல்ல அப்பாவும் வேண்டும். உங்களால் தர முடியுமா? - அன்புடன் பிளேக்” என்று எழுதியுள்ளார்.'SafeHaven of Tarrant County’ என்ற அந்த பாதுகாப்பு முகாமினர் கடந்த டிசம்பர் 18-ம் தேதி தங்களது முகநூல் பக்கத்தில், ``பிளேக், எங்களது முகாமிலிருக்கும் 7 வயது சிறுவன். பிளேக்கின் அம்மா, கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு சிறுவன் எழுதிய கடிதத்தை அவருடைய பையிலிருந்து கண்டுபிடித்துள்ளார்” என்பதைக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளனர்.
இதைப் படித்து நெகிழ்ந்த நெட்டிசன்கள், ``நான் பிளேக்கிற்கு உதவி செய்ய விரும்புகிறேன். அவருடன் சேர்ந்து உங்கள் முகாமில் இருக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கு நான் உதவி செய்ய விரும்புகிறேன். இந்த கிறிஸ்துமஸ் பிளேக்கிற்கு மிகச்சிறப்பாக அமைய வேண்டும்” போன்ற கமென்டுகளால் பிளேக்கின் ஆசையை நிறைவேற்ற முன்வந்தனர்.
பிளேக்கின் வார்த்தைகளால் இதயம் உடைந்த நெட்டிசன்கள் பாதுகாப்பு முகாமில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் பரிசுகளை வழங்கியுள்ளனர். இதுகுறித்து முகநூலில், பிளேக்குக்கும் பாதுகாப்பு முகாமில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் நெட்டிசன்கள் வழங்கிய பரிசுப் பொருள்களுக்கான புகைப்படத்தை``You all are INCREDIBLE!!” என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments