7 வயதில் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் வென்ற பொள்ளாச்சி சிறுமி… குவியும் பாராட்டு!
- IndiaGlitz, [Monday,April 12 2021]
பொள்ளாச்சியைச் சேர்ந்த சிறுமி வர்ணா 7 வயதில் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடித்து இருக்கிறார். அவர் ஒரே நிமிடத்தில் 100-1 தலைகீழாகக் கூறியும் 9 மொழிகளில் நன்றி கூறுதல், 5 மொழிகளில் பாடுதல், 12 திருக்குறளை வேகமாக ஒப்புவித்தல், இருபரிமாணம் மற்றும் முப்பரிமாணப் படங்களை 42 வினாடிகளில் சொல்லி முடித்தல் போன்றவற்றில் திறமைப் படைத்தவராக இருக்கிறார்.
சிறுவயது முதலே வேகமாகப் படித்தல் மற்றும் அதை ஒப்புவித்தலில் ஆர்வம் காட்டிய வர்ணாவிற்கு அவரது பெற்றோர் மீனாட்சி மற்றும் வாஞ்சிநாதன் இருவரும் பயிற்சி அளித்துள்ளனர். மேலும் இவர் பயிற்சி பெற்ற வீடியோக்களை இந்தியன் புக்ஸ் ஆஃப் ரெக்காட்ஸ்க்கு அனுப்பியும் உள்ளனர். இந்த வீடியோக்களை பார்த்த இந்திய புக் ஆஃப் ரெக்காட்ஸ் குழு, சிறுமி வர்ணாவிற்கு பரிசு சான்றிதழை அனுப்பி அதோடு புத்தகத்தில் பெயரை இடம்பெறவும் செய்துள்ளது.
இதுகுறித்து பேசிய வர்ணாவின் பெற்றோர் குழந்தையாக இருக்கும்போதே வர்ணா எதையும் வேகமாகச் செய்யும் ஆற்றல் பெற்று இருந்தார். இதைக் கண்டுபிடித்த நாங்கள் அவருக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தோம். தற்போது நாட்டியம் கற்று வருகிறார். எனவே பரதநாட்டியத்தில் உள்ள முத்திரைகளை வேகமாகச் சொல்லுமாறு பயிற்சி கொடுத்து வருகிறோம். எனவே கின்னஸ் சாதனைக்காக வர்ணா முயற்சிப்பார் என மகிழ்ச்சி பொங்க தெரிவித்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.