7 வயது சிறுவன் மீது பாலியல் வழக்கு? தண்டனை குறித்து சூடு பிடிக்கும் விவாதம்!
- IndiaGlitz, [Friday,June 04 2021]
நியூயார்க் மாகாணத்தில் உள்ள பிரேசர் நீர்வீழ்ச்சிக்கு அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் இருந்து 7 வயது சிறுவன் ஒருவனை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். அதோடு பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக அந்தச் சிறுவன் மீது கடந்த மார்ச் 23 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்தச் சிறுவன் கைது விவகாரம் தற்போது அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. குற்றம் சுமத்தப்பட்ட 7 வயது சிறுவன் வெறும் 2 ஆம் வகுப்பு மட்டுமே படிக்கிறான். அந்தச் சிறுவனை பாலியல் குற்ற வழக்கில் கைது செய்து தண்டனை அளிப்பதற்கு அறிவியல் இடம் கொடுக்கவில்லை என்று வழக்கறிஞர்கள் வாதாடத் தொடங்கி உள்ளனர். அதோடு 7 வயது சிறுவன் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு இருந்தான் என்பதை போலீசார் நிரூபிக்க வேண்டும். அது முடியாது என்றே வழக்கறிஞர்கள் கூறி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் சிறுவர்களை கைது செய்வதற்குச் சரியான ஓழுங்கு முறைகள் எதுவும் இல்லை. அதற்கான சட்ட வரைவுகளில் குழப்பம் இருக்கிறது எனத் தற்போது சமூகநல ஆர்வலர்கள் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். கடந்த 2019 ஆம் ஆண்டு வட கரோலினா மாகாணத்தில் ஒரு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த 6 வயது சிறுவனை போலீசார் கைது செய்ததாகக் கூறப்படுகிறது.
இதேபோல அமெரிக்கா முழுவதுமே சிறுவர்களை வயது வித்தியாசம் இன்றி குற்ற வழக்குகளுக்காக போலீசார் கைது செய்கின்றனர். இதனால் கைது செய்யும் விவகாரத்தில் வயது வரம்பை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தற்போது கோரிக்கை எழுந்து இருக்கிறது. இதையடுத்து சிறுவர்களை கைது செய்யும் வயது வரம்பை குறைந்தது 12 க்கு மேல் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
நியூயார்க் மாகாணச் சட்டப்படி இதுவரை 7-12 வயது சிறுவர்களின் வழக்கை குடும்ப நிதிமன்றங்களே விசாரித்து வருகின்றன. ஆனாலும் சிறுவர்களை இதுபோன்று கைது செய்யும்போது அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டு எதிர்காலமே காணாமல் போகும் அபாயம் இருப்பதாக மனநல ஆலோசகர்களும் கருத்துத் தெரிவித்த வருகின்றனர். இதனால் கைது செய்யும் விவகாரத்தில் அமெரிக்க மாகாணத்தில் மீண்டும் முறையான ஆலோசனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
மேலும் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கும் 7 வயது சிறுவன் கடந்த 2 மாதமாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்றும் அவருக்கான மனித உரிமை எங்கே என்றும் சிலர் ஆவேசம் எழுப்பத் தொடங்கி விட்டனர்.