இனி "தலப்பாகட்டி பிரியாணியை" பயன்படுத்த கூடாது..! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
- IndiaGlitz, [Monday,May 06 2019]
உணவு பிரியர்களை பொறுத்தவரை, பல பிரியாணி கடைகள் இருந்தாலும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கடையை தேடி சென்று சாப்பிடுபவர்கள் பலர் உள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம், தலப்பாகட்டி பிரியாணியின் தனித்துவமான ருசி தான். இந்நிலையில் 'தலப்பாகட்டு பிரியாணி' கடையின் பெயரையும், அதன் அடையாளத்தையும் பயன்படுத்தி 7 கடைகள் இயங்கி வருவதாகவும், அவற்றிற்கு தடை விதிக்க வேண்டும் என, தலப்பாகட்டி பிரியாணி கடையின் பங்குதாரர்களில் ஒருவரான நாகசாமி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நாகசாமி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது... 1957 -ல் என் தாத்தா நாகசாமி நாடார், திண்டுக்கல்லில் பிரியாணி உணவகத்தைத் தொடங்கினார். அவர் எப்போதும் தலப்பாகட்டிக் கொண்டிருந்ததால் இந்த இந்த கடைக்கும் தலப்பாகட்டி பிரியாணி கடை என பெயர் வந்தது.
இதைத்தொடர்ந்து 'தலப்பாகட்டி நாயுடு ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு தற்போது இயங்கி வருகிறது. இந்நிலையில் தலப்பாகட்டி பிரியாணி கடையின் பெயரையும் அதன் அடையாளக் குறியீடையும் பயன்படுத்தி, 7 கடைகள் இயங்கி வருகிறது. அவற்றிக்கு தடை விதிக்க வேண்டும் என் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறியுள்ள ஏழு கடைகள்... தலப்பாகட்டி பிரியாணி கோடம்பாக்கம், தலப்பாகட்டி பிரியாணி கூடுவாஞ்சேரி, ஸ்டார் தலப்பாகட்டி ரெஸ்டாரன்ட் கீழ்பாக்கம், தலப்பாக்கட்டு பிரியாணி பூந்தமல்லி, தலப்பாகட்டி பிரியாணி ஸ்ரீபெரும்புதூர், சென்னை ஹலால் தலப்பாக்கட்டு பிரியாணி குரோம்பேட்டை, முகமது அஷ்ரப் தலப்பாகட்டி பிரியாணி கூடுவாஞ்சேரி ஆகியவை.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் இந்த ஏழு கடைகளுக்கும் இடைக்கால தடைவிதித்தது மட்டுமின்றி, இந்த மனுவிற்கு பதில் அளிக்க 7 கடைகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.