7 பேர் கைது, சமூக வலைத்தளங்களுக்கு தடை: இலங்கை அரசு அதிரடி நடவடிக்கை
- IndiaGlitz, [Sunday,April 21 2019]
இலங்கையில் இன்று காலை நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்தில் இதுவரை 200க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாகவும், 450க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் இந்த வெடிகுண்டு தாக்குதல் பெரும்பாலும் தற்கொலைப்படை தாக்குதலால் நிகழ்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூவன் விஜயவர்தன சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்பட சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் வெடிகுண்டு சம்பவம் மேலும் தொடரும் என அஞ்சப்படுவதால் இலங்கையின் முக்கிய பகுதியில் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் இலங்கை அதிபர் சிறிசேனா இந்த வெடிகுண்டு சம்பவம் குறித்து கூறியபோது, 'மக்கள் குண்டுவெடிப்பு தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும், குண்டுவெடிப்புக்கான பின்னணியை கண்டறிய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.