கொரோனாவால் அமெரிக்காவில் 6.65 மில்லியன் மக்கள் வேலையிழப்பு!!! அரசின் நிவாரணத்தொகைக்கு விண்ணப்பம்!!!
- IndiaGlitz, [Friday,April 03 2020]
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நாடுகளின் பட்டியலில் தற்போது அமெரிக்கா முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. கொரோனா தாக்கம், அந்நாட்டில் அனைத்தையும் முடக்கியிருக்கும் நிலையில் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து இருக்கிறது. அந்நாட்டில் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வேலையின்மை காரணங்களுக்காக வழங்கப்படும் அரசின் நிவாரண சலுகைகளுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இந்த எண்ணிக்கை மார்ச் 28 அன்று 6.65 மில்லியனாக உயர்ந்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 40 ஆயிரத்தை தாண்டியிருக்கும் நிலையில் அந்நாட்டின் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. அனைத்து மாகாணங்களும் முடக்கப்பட்ட நிலையில் பலர் தற்போது வேலைகளை இழந்துள்ளனர். வீட்டு வாடகை செலுத்தமுடியாமலும், மருத்துவச் செலவுகளை கவனித்துக்கொள்ள முடியாமலும் பலர் தவித்துவரும் சூழல் உருவாகியிருக்கிறது. நாடு முழுவதும் ஹோட்டல்கள், ஜிம்கள், போக்குவரத்து அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் வேலையிழப்புகள் பெருகியுள்ளன.
அமெரிக்க அதிகாரிகள் சிலரும் வேலையிழந்தவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கு இன்னும் அதிக நாட்கள் தேவைப்படும் எனத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஒட்டுமொத்த அமெரிக்காவில் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என இன்னும் கணிக்கப்படவில்லை. ஆனால் வேலையிழந்தோர் எண்ணிக்கை கடந்த பிப்ரவரி மாதத்தில் 3.5 % ஆக இருந்தது என்றும் தற்போது அது 10% ஆக உயர்ந்து இருக்கிறது எனவும் கூறப்படுகிறது.