நீங்களே இப்படி செய்யலாமா? 65 வயதில் 16 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்ட மேயர்!

  • IndiaGlitz, [Wednesday,May 03 2023]

பிரேசில் நாட்டைச் சேர்ந்த நகர மேயர் ஒருவர் 65 வயதில் 16 வயது சிறுமியைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இதுகுறித்த தகவல்கள் தற்போது இணையதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பொதுவாக காதலுக்கு வயது வித்தியாசம் எதற்கு எனும் கருத்து இருந்துவருகிறது. வயது வித்தியாசம் என்றால் நம்மூரில் 17 வயதுவரையிலான வயது வித்தியாச திருமணங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் 49 வயது வித்தியாசத்தில் ஒரு திருமணம் நடந்துள்ளது. அதுவும் ஒரு நகரத்தின் மேயராக இருக்கும் நபரே ஒரு சிறுமியைத் திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.

லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த பிரேசில் நாட்டின் பரானா மாநிலத்தில் உள்ள அரகாரியா எனும் நகரதிற்கு இரண்டாவது முறையாக மேயராக இருந்து வருபவர் ஹிசாம் ஹீசைன் டெஹைனி. 65 வயதான இவர் குழந்தை மாடலாக இருந்துவந்த கவான் ரோட் காமர்கோ எனும் சிறுமியை ஏப்ரல் 15 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்தத் திருமணத்திற்கு ஒப்புதல் கிடைக்குமா? எனும் கேள்வி இயல்பாக எழலாம். பிரேசில் நாட்டின் சட்டப்படி 16 வயதடைந்த சிறுமி திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால் இதற்குப் பெற்றோரின் சம்மதம் இருக்க வேண்டும் என்பதுதான் ஒரே தடை. இந்தத் திருமணத்திற்கு சிறுமியின் அம்மா முழு ஒப்புதல் அளித்துள்ளார் என்பதுதான் இங்கு மிகப்பெரிய ஆச்சர்யமே.

இந்நிலையில் வயது வித்தியாசத்தை தவிர இந்தத் திருமணத்தையொட்டி சில முக்கியக் குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டு வருகின்றன. அதாவது சுற்றுலாத்துறையில் கடைநிலை ஊழியராக இருந்த சிறுமியின் அம்மாவிற்கு தற்போது நகர செயலாளர் பதவி அளிக்கப்பட்டு தற்போது 1500 பிரேசிலியன் ரியல் சம்பளம் வழங்கப்படுகிறது. அதேபோல சிறுமியின் அத்தைக்கும் முக்கியப் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் மேயர் ஹிசாம் ஹீசைன் டெஹைனி தற்போது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.