கூவத்தில் கொரோனா நோயாளியின் பிணம்: சென்னை மருத்துவமனையில் இருந்து தப்பியவர் என தகவல்
- IndiaGlitz, [Friday,June 19 2020]
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றும் தமிழகத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர்களும், சென்னையில் 1300க்கும் மேற்பட்டவர்களும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்ற செய்திகள் சற்றுமுன் பார்த்தோம்.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மன அழுத்தம் காரணமாக மருத்துவமனைகளில் இருந்து தப்பித்துச் செல்லும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 65 வயது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென காணாமல் போனார். அவரை தேடும் பணியில் சுகாதாரத் துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் சற்று முன்னர் அவர் நேப்பியர் பாலம் அருகே உள்ள கூவம் நதியில் பிணமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து தப்பித்த கொரோனா நோயாளி தான் கூவம் நதியில் பிணமாக இருந்தவர் என்பது மருத்துவமனை ஊழியர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி கூவத்தில் விழுந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.