நீட் தேர்வில் வெற்றிப்பெற்று மருத்துவம் பயிலும் 64 வயது சாதனை மனிதர்… கூடவே இன்னொரு டிவிஸ்ட்!!!
- IndiaGlitz, [Saturday,December 26 2020]
ஒடிசா மாநிலத்தில் ஜெய்கிஷோர் பிரதான் என்பவர் 64 வயதில் மருத்துவம் படிக்கிறார். இவர் படிக்கும் அதே கல்லூரியில் அவரது இளைய மகளும் பல் மருத்துவம் படிக்கிறார் என்பதுதான் இன்னொரு ஆனந்தம். பர்கார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய்கிஷோருக்கு தன்னுடைய இளம் வயதில் இருந்தே ஒரு மருத்துவராக ஆக வேண்டும் என்பதுதான் கனவாக இருந்திருக்கிறது. ஆனால் பலமுறை நுழைவுத் தேர்வு எழுதியும் அவரால் நுழைவு தேர்வில் வெற்றி அடைய முடியவில்லை.
இதனால் வங்கித்தேர்வு எழுதி அதில் வெற்றிப்பெற்று வங்கி அதிகாரியாக தன் வாழ்க்கையை நடத்தி இருக்கிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வும் பெற்று இருக்கிறார். இந்நிலையில் மருத்துவராகும் தன்னுடைய வாழ்நாள் கனவு நிறைவேறாமலே போய்விட்டதே என நினைத்து வருந்திய இவர், இறுதியில் படிப்புக்கு வயது ஒரு தடையே இல்லை என முடிவெடுத்து நீட் தேர்வு எழுத தயாராகி இருக்கிறார்.
ஒரு நாளைக்கு 10-12 மணி நேரப் படிப்பு. இப்படியே தனது கடின உழைப்பால் இறுதியில் நீட் தேர்விலும் வெற்றிப் பெற்று இருக்கிறார். இதனால் மருத்துவம் பயிலுவதற்கான வாய்ப்பை பெற்று ஒரு மருத்துவக் கல்லூரி மாணவராக மாறிவிட்டார். இவர் மருத்துவம் படிப்பதற்காக நுழைந்த அதே கல்லூரியில் அவருடைய இளைய மகள் ஏற்கனவே அங்கு இரண்டாம் ஆண்டு பல் மருத்துவம் பயின்று வருகிறார். அப்பாவும் மகளும் ஒரே கல்லூரியில் மருத்துவம் படிக்கும் விசித்திரம் ஒடிசாவில் நடைபெற்று இருக்கிறது. இந்நிலையில் ஜெய்கிஷோரின் கடின உழைப்பிற்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.