61 வயதில் நீட் தேர்வில் வெற்றி… பள்ளி மாணவருக்கு விட்டுக்கொடுத்த நல்லாசிரியர்!

  • IndiaGlitz, [Saturday,January 29 2022]

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுப்பெற்ற ஆசிரியர் ஒருவர் கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் வெற்றிப்பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் தனது சீட்டை மற்றொரு அரசு பள்ளி மாணவருக்கு விட்டுகொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவர் இண்டூர் பகுதியிலுள்ள அரசு பள்ளியில் விலங்கியல் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுப்பெற்றுள்ளார். மேலும் கடந்த ஆண்டு மத்திய அரசு நீட் தேர்விற்கு உச்ச வயதுவரம்பை நீக்கியது. இதனால் தனது சிறிய வயது மருத்துவர் கனவை நிறைவேற்றிக்கொள்ள நினைத்த சிவப்பிரகாசம் நீட்தேர்வு எழுதியுள்ளார். இதில் 249 மதிப்பெண்களைப் பெற்று வெற்றியும் பெற்றுளார்.

இதைத்தொடர்ந்து அரசுப்பள்ளியிலேயே பயின்ற சிவப்பிரகாசத்திற்கு தமிழக அரசு வழங்கிய 7.5% உள்இடஒதுக்கீட்டு அடிப்படையில் 349 ஆவது இடம் கிடைத்துள்ளது. இதனால் நேற்று ஓமந்தூரார் மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் அவர் கலந்துகொண்டுள்ளார். ஆனால் சிவப்பிரகாசம் பியூசி படித்துவிட்டு நேரடியாக பட்டப்படிப்பு படித்தவர் என்பதால் அவருக்கு சீட் ஒதுக்க முடியுமா? என்று அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் ஆசிரியர் சிவப்பிரகாசம் கன்னியாக்குமரியில் மருத்துவம் படிக்கும் தனது மகனைத் தொடர்பு கொண்டு பேசி மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொள்வது குறித்து ஆலோசித்து இருக்கிறார். இதற்கு அவருடைய மகன், நீங்கள் மருத்துவம் பயின்றால் 10 வருடங்கள் மட்டுமே சேவையாற்ற முடியும். இதுவே ஒரு மாணவனுக்கு அந்த சீட் கிடைத்தால் அவர் 40-50 வருடங்கள் சேவையாற்ற முடியும் என்று கூறியதைத் தொடர்ந்து சிவப்பிரகாசம் தனது சீட்டை பெருமையுடன் ஒரு அரசு பள்ளி மாணவருக்கு விட்டுக்கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் பலரது மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய அதே நேரத்தில் கற்பதற்கு வயது ஒரு தடையே இல்லை என்பதை மீண்டும் நினைவூட்டியிருக்கிறது.