இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 601 பேர்களுக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Saturday,April 04 2020]
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த ஊரடங்கு உத்தரவை தற்போது 10 நாட்களுக்கு மேல் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையிலும் கொரோனா வைரஸின் தாக்கம் கொஞ்சம் கூட குறையவில்லை. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 601 பேர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
குறிப்பாக டெல்லி மாநாட்டில் பங்கேற்று தங்களது சொந்த மாநிலத்துக்கு திரும்பியவர்கள்தான் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் அதிகமாகியுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் 17 மாநிலங்களில் உள்ளதாகவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் கேரளா, மத்திய பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் மட்டும் 58 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 9 சதவிகிதம் பேர் 20 வயதுக்கு உள்ளானவர்களும் என்றும், 42% பேர் 21 முதல் 40 வயதிற்கு வயதினர் என்றும் 33 சதவிகிதம் 41 முதல் 60 வயதினர் என்றும் 17 சதவிகிதத்தினர் 60 வயதுக்கு மேலானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.