'60வயது மாநிறம்': அருமையான தந்தை-மகன் பாசக்கதை
தந்தை-மகன் உறவின் நெகிழ்ச்சியான பாசத்தையும் தந்தை அருகில் இல்லாத போதுதான் அவருடைய அருமை தெரியும் என்பதையும் புரிய வைக்கும் ஒரு நெகிழ்ச்சியான கதைதான் இந்த '60வயது மாநிறம்'
ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்ட தந்தை பிரகாஷ்ராஜை ஒரு ஹெல்த்கேர் செண்டரில் சேர்த்துவிட்டு மும்பைக்கு வேலை விஷயமாக செல்லும் விக்ரம்பிரபு, மூன்றுநாள் விடுமுறையில் தந்தையை பார்க்க சென்னை வருகிறார். தந்தையை வெளியில் அழைத்து செல்லும் விக்ரம்பிரபு ஒரு சிறு அலட்சியத்தால் அவரை தொலைத்து விடுகிறார். மகனையே 'யார் நீ' என்று கேட்கும் நிலையில் உள்ள தந்தையை விக்ரம் பிரபுவும் அந்த ஹெல்த்கேரில் பணிபுரியும் டாக்டர் இந்துஜாவும் நகரம் முழுக்க தேடுகின்றனர்.
இந்த நிலையில் பெரிய மனிதர் என்ற போர்வையில் இருக்கும் ஒரு சமூக குற்றவாளியிடம் அடியாளாக வேலை பார்த்து கொலை உள்பட குற்றங்களை செய்யும் சமுத்திரக்கனியிடம் எதிர்பாராமல் சிக்குகிறார் பிரகாஷ்ராஜ். இவர்கள் அனைவரும் போலீசுக்கு பயந்து இளங்கோ வீட்டில் தங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. பிரகாஷ்ராஜ் உள்பட அனைவரையும் கொலை செய்துவிட்டு மும்பைக்கு தப்பி செல்லுமாறு சமுத்திரக்கனியிடம் அந்த பெரிய மனிதர் கூற, சமுத்திரக்கனி எடுத்த முடிவு என்ன? விக்ரம் பிரபுவும் டாக்டர் இந்துஜாவும் பிரகாஷ்ராஜை தேடி கண்டுபிடித்தார்களா? என்பதற்கு விடைதான் இந்த படத்தின் கதை
பேராசிரியராக இருந்து பல நல்ல மாணவர்களை உருவாக்கிய பிரகாஷ்ராஜ், ஞாபகமறதி நோயால் மகனையே 'யார் நீ' என்று கேட்கும் கேரக்டரில் நடித்துள்ளார் என்று சொல்வதைவிட அந்த கேரக்டராகவே வாழ்ந்துள்ளார் என்றுதன் சொல்ல வேண்டும். மகனிடம் காட்டும் பாசம், டாக்டர் இந்துஜாவிடம் தனது காதல் கதையை கூறும் நேர்த்தி, கொலைகாரன் சமுத்திரக்கனியிடம் காட்டும் பாசம், என ஒரு தேசிய விருது பெற தகுதியான நடிப்பை தந்துள்ளார்.
ஆவேசம், ஆக்சன் இல்லாத ஒரு அமைதியான விக்ரம் பிரபுவை இந்த படத்தில் தான் பார்க்கின்றோம். தந்தை அருகில் இருக்கும்போது அவரை அலட்சியப்படுத்திவிட்டு அவர் தொலைந்த பிறகு அவருடைய அருமையை புரிந்து கண்கலங்கும்போது நமக்கும் கண் கலங்குகிறது. இந்துஜாவிடம் ஏற்படும் மெல்லிய அழகான காதலை அவர் தெரிவிக்கும் பாணி சூப்பர்.
டாக்டர் கேரக்டரில் நடித்திருக்கும் இந்துஜாவின் நடிப்பு தமிழ் சினிமாவுக்கு இன்னொரு நடிக்க தெரிந்த நடிகை வந்துவிட்டதை காட்டுகிறது. கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு என்பதை நிருபிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட கேரக்டரில் சமுத்திரக்கனி சிறப்பாக நடித்துள்ளார்.
இயக்குனர் ராதாமோகன் படத்தில் தவறாமல் இடம்பெறும் இளங்கோ அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் மதுமிதா ஆகிய இருவருமே இந்த படத்திலும் நகைச்சுவை மற்றும் செண்டிமெண்ட் நடிப்பை கொடுத்துள்ளனர்.
இந்த படத்தின் மிகப்பெரிய பலம் இசைஞானி இளையராஜா. பல நெகிழ்ச்சியான காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது அவரது பின்னணிதான். மூன்றே பாடல்கள் என்றாலும் முத்தான பாடல்கள்
இயக்குனர் ராதாமோகனின் திரைக்கதையில் பிரமாண்டம், குத்துபாடல், வெளிநாட்டு கனவுப்பாடல், தனியான காமெடி டிராக், ஆக்சன், திடீர் திருப்பங்கள், அதிர வைக்கும் கிளைமாக்ஸ் என ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கு தேவையான எதுவும் இல்லை. ஆனால் பார்வையாளர்களை ஒருநிமிடம் கூட கவனத்தை சிதறவிடாத அம்சங்கள் நிறைய உள்ளன. சமுத்திரக்கனி மற்றும் அவருடைய விசுவாசமான ஓனர் குறித்த காட்சிகள் இந்த படத்திற்கு தேவையில்லை என்றாலும் அவை அளவுடன் இருப்பது திருப்தியை தருகிறது. மேலும் தந்தை-மகன் உறவை இதைவிட அழுத்தமாக, ஆழமாக சொல்ல முடியுமா? என்று தெரியவில்லை. இப்படி ஒரு அருமையான படத்தை இயக்கிய ராதாமோகனுக்கு நமது பாராட்டுக்கள்.
அதேபோல் 'தெறி', 'கபாலி' போன்ற பல கமர்ஷியல் படங்களை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் வியாபார நோக்கமின்றி ஒரு நல்ல படத்தை தயாரித்துள்ளது தமிழ் சினிமாவுக்கு பெருமை். வழக்கமான கமர்ஷியல் அம்சங்கள் இல்லை என்றாலும் போரடிக்காமல் நேர்த்தியாக ஒரு படத்தை கொண்டு சென்றாலும் அதுவும் கமர்ஷியல் தான் என்ற நம்பிக்கையுடன் இந்த படத்தை தயாரித்த தாணு அவர்களை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்
தந்தையின் அருமை தெரிந்தும், தெரியாமலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தவறாமல் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்பதே நம்முடைய பரிந்துரை
Comments