ஒரே பள்ளியில் 60 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு!
- IndiaGlitz, [Thursday,September 30 2021]
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் உள்ள தனியார் பள்ளியொன்றில் 60 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டு, இழுத்து மூடப்பட்டிருக்கிறது.
கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலைதாக்கம் சற்று குறைந்ததையடுத்து பெரும்பாலான மாநிலங்களில் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. தமிழகத்திலும் இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் ஒடிசாவில் 1-8 வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பெங்களூரு நகரில் உள்ள தனியார் விடுதி பள்ளியொன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டதை அடுத்து அந்த விடுதியில் உள்ள மற்ற 400 மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனையை சுகாதாரத்துறை அதிகாரிகள் எடுத்துள்ளனர். அந்தப் பரிசோதனையில் கிட்டத்தட்ட 60 மாணவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். மேலும் விடுதியில் இருந்த மற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதே விடுதியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர். ஒரே பள்ளியில் 60 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடையே கடும் பதற்றம் ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.