கல்வான் தாக்குதலில் 60 சீன வீரர்கள் உயிரிழப்பா?? விறுவிறுப்பான தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கலவான் மலை பள்ளத்தாக்கில் கடந்த ஜுன் 15 ஆம் தேதி சீன இராணுவ வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டனர். இதனால் இந்திய மற்றும் சீன இராணுவ வீரர்களிடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டன. இந்த மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தகவலை இந்திய இராணுவம் உறுதிப்படுத்தியது. அதைப்போல சீனாவின் சார்பாக பலரும் உயிரிழந்து இருக்கலாம் எனக் கூறப்பட்டாலும் தெளிவான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாக வில்லை.
முதற்கட்டமாக அமெரிக்க ஊடகங்கள் கல்வான் தாக்குதலில் 40-45 சீன இராணுவ வீரர்கள் உயிரிழந்து இருக்கலாம் எனக் கூறியிருந்தது. ஆனால் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் இத்தகவலை உறுதிப் படுத்தவில்லை. மேலும் இறந்த வீரர்களுக்கு உரிய இராணுவ மரியாதையோடு அடக்கம் செய்யப் பட்டதாகக்கூட எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது கல்வான் தாக்குதலில் 60 இராணுவ வீரர்கள் உயிரிழந்து விட்டனர் என்ற தகவலை நியூஸ் வீக்ஸ் என்ற அமெரிக்க பத்திரிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்தத் தகவலால் கடும் சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜி ஜின்பிங் கடந்த 2012 நவம்பரில் அந்நாட்டின் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக ஆனார். அதில் இருந்து சீனாவின் துருப்புகள் இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறுவதைத் தொடர்ந்து வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. இதனால் இந்தியாவிற்கும் சீனாவிற்குமான நட்புறவில் பெரும் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. கொரோனா நேரத்தில் இந்தியா எல்லைப் பகுதியில் கட்டமைப்புகளை மேற்கொள்கிறது என்பதைக் காரணமாகக் காட்டி முதலில் சீன இராணுவ வீரர்கள் கடந்த மே மாதம் அத்துமீறலில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து இருநாட்டு இராணுவ உயர் அதிகாரிகளும் கடுமையான பேச்சு வார்தையில் ஈடுபட்டனர்.
ஜுன் 6 ஆம் தேதி பேச்சுவார்தையில் உடன்பாடுகள் எட்டப்பட்ட நிலையிலும் ஜுன் 15 ஆம் தேதி சீன இராணுவ வீரர்கள் எல்லையில் அத்துமீறி கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் இரு தரப்பினருக்குமே பாதிப்புகள் ஏற்பட்டபோதும் சீனா தனக்கு ஏற்பட்ட பாதிப்பை குறித்து வெளியுலகிற்குத் தெரியப்படுத்த வில்லை. மேலும் எல்லைப் பகுதியில் தொடர்ந்து தாக்குதலை இப்போதும் நடத்தி வருகிறது. இதனால் தற்போது லடாக் எல்லைப் பகுதியில் கடுமையான பதட்டம் நிலவிவருகிறது.
கடந்த 4 நாட்களாக லடாக் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் 200 மீட்டர் தொலைவில் இருநாட்டு இராணுவ வீரர்களும் குவிக்கப் பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அமெரிக்க ஊடகம் கல்வான் தாக்குதலில் சீனாவின் தரப்பில் 60 இராணுவ வீரர்கள் உயிரிழந்து விட்டனர் என்ற தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறது. நியூஸ் வீக்ஸ் இத்தகவலை ஜனநாயக பாதுகாப்புக்கான அறக்கட்டளையைச் சேர்ந்த கிளியோ பாஸ்கலை மேற்கோள் காட்டி வெளியிட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதில் “கடந்த மே மாதத்திலேயே சீனாவின் வினோதமான நடவடிக்கைகள் குறித்து ரஷ்யா இந்தியாவிடம் கூறியது. சீனா ஏற்கனவே திபெத் பகுதியில் பயிற்சிகளை நடத்தி வந்தது என ரஷ்யா கூறியிருந்தது. அந்நிலையில் தான் ஜுன் 15 அன்று கல்வானில் இருநாட்டு படையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட இரு நாடுகளுக்கும் இடையே 45 ஆண்டுகளில் முதன் முதலாக நடந்த மோதல் சம்பவமாகும் இது” என குறிப்பிட்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments