6 வயது சிறுமி காயங்களுடன் பிணமாக மீட்பு: பாலியல் பலாத்காரம் செய்து கொலையா?
- IndiaGlitz, [Tuesday,March 26 2019]
கோவை அருகே ஒன்றாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் மர்மமான முறையில் ரத்தக்காயங்களுடன் சற்றுமுன் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் உடலில் ரத்தக்காயங்கள் இருப்பதால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கோவை அருகே பன்னிமடை என்ற பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி பள்ளியில் இருந்து திரும்பியது கடைக்கு பொருள் வாங்க சென்றார். ஆனால் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது தாயார் பல இடங்களில் மகளை தேடியுள்ளார். பின்னர் இதுகுறித்து காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
காவல்துறை அதிகாரிகள் விடிய விடிய தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில் சிறுமியின் வீடு அருகே முட்டுச்சந்து ஒன்றில் டி சர்ட் சுற்றப்பட்ட நிலையில் உடல் முழுவதும் காயங்களுடன் சிறுமியின் பிணம் மீட்கப்பட்டது. மகளின் பிணத்தை பார்த்து கதறியழுத அவரது தாயார் தனது மகளை மர்ம நபர்கள் பாலியல் வன்புணர்வு செய்து கொன்றிருக்கலாம் என கூறி கதறியது பார்ப்போரை கதிகலங்க வைத்தது.
இந்த நிலையில் சிறுமியின் பிணத்தை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர். அதன் அறிக்கை வந்த பின்னரே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பது தெரிய வரும். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.