பிஸ்கட் என நினைத்து ஜெலட்டின் குச்சியை கடித்த 6 வயது குழந்தை!!! அலட்சியத்தால் நடந்த வீபரீதம்!!!
- IndiaGlitz, [Thursday,June 11 2020]
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே 6 வயது குழந்தை ஒன்று பிஸ்கட் என நினைத்து ஜெலட்டின் குச்சியை வாயில் வைத்து கடித்து இருக்கிறது. கடித்தவுடன் அது வெடித்தால் குழந்தை அநியாயமாக இறந்து விட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அழகரை என்ற கிராமத்தில் வசித்து வந்த கூலித் தொழிலாளி பூபதி. இவரின் மூத்த மகன் கங்காதரன். காவிரி ஆற்றில் தமிழரசன், மோகன்ராஸ் என்ற 2 நண்பர்களுடன் சேர்ந்து ஜெலட்டின் வெடிமருந்து குச்சியை வைத்து மீன்பிடித்து உள்ளார். காவிரி ஆற்றில் நீரோட்டத்தில் இந்த ஜெலட்டின் குச்சியை வைத்து வெடித்து உள்ளனர். அப்படி வெடிக்கும்போது எதிர் திசையில் பயந்து திரும்பும் மீன்களை எளிதாக பிடித்து விடலாம் என்பது இவர்களின் நம்பிக்கை.
குவாரிகளில் பயன்படுத்தப்படும் 3 ஜெலட்டின் குச்சிகளை வாங்கிவந்த கங்காதரன் அவற்றில் இரண்டை மட்டும் பயன்படுத்தி உள்ளார். மற்றொன்றை வீட்டில் வைத்திருந்தபோது இத்துயரச் சம்பவம் நடந்து இருக்கிறது. தவறுதலாக ஜெலட்டின் குச்சியை எடுத்த குழந்தை விஷ்ணு தேவ் அது பிஸ்கெட் நிறத்தில் இருப்பதால் தின்பண்டம் என நினைத்து இருக்கிறது. வாயில் வைத்து கடித்த உடனே ஜெலட்டின் குச்சி வெடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. சத்தம் கேட்டு ஓடிவந்த அவனது தந்தை பூபதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். ஆனால் பாதி வழியிலேயே உயிர் பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக தற்போது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.