சென்னை பீனீக்ஸ் மால் சென்றவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்: மாநகராட்சி வேண்டுகோள்

சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலுக்கு மார்ச் 10 முதல் 17 வரை சென்றவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னையில் உள்ள மிகப் பெரிய மால்களில் ஒன்று வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மால். இந்த மாலில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்த 6 பெண்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 6 பேரும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து இது குறித்து தகவல் அறிந்த சென்னை மாநகராட்சி கடந்த மார்ச் 10 முதல் 17 வரை அந்த மாலுக்கு சென்றவர்கள் அனைவரும் தங்களை தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் குறித்த அறிகுறி ஏதேனும் இருந்தால் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.