மாதவரம் பால் பண்ணையில் மேலும் 6 பேருக்கு கொரோனா! பாலுக்கு தட்டுப்பாடு வருமா?

உலகெங்கிலும் மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஏழை பணக்காரர் வித்தியாசமின்றி அனைவரையும் தாக்கி வருகிறது என்பதும், லட்சக்கணக்கான உயிர்களையும் பலியாக்கி வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சென்னையில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பணிபுரியும் இருவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்போது மேலும் ஆறு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

சென்னையில் நாளொன்றுக்கு 13.5 லட்சம் லிட்டர் பால் வினியோகம் செய்யப்படுகிறது. அதில் மாதவரம் பால் பண்ணையில் இருந்து மட்டும் 4.2 லட்சம் லிட்டர் பால் வினியோகம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மாதவரம் பால்பண்ணையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பால் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து தற்காலிக ஊழியர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் சென்னைக்கு பால் தடங்கல் இல்லாமல் கிடைத்து வருகிறது

இந்த நிலையில் தற்போது மாதவரம் பால் பண்ணையில் பணி புரியும் மேலும் ஆறு ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாதவரம் பால்பண்ணையில் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது

மாதவரம் பால்பண்ணையில் மிக வேகமாக கொரோனா பரவி வருவதால் ஆவின் பால் சென்னையில் உள்ள அனைவருக்கும் தங்குதடையின்றி வினியோகம் செய்யப்படுவது குறித்து ஆவின் பால் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது