டெல்லி மத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 6 பேர் கொரோனாவால் பலி: அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Tuesday,March 31 2020]
மார்ச் 13 முதல் 15 வரை டெல்லியில் ஒரு குறிப்பிட்ட மத நிகழ்ச்சி ஒன்று நடந்ததாகவும் அந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதில் அவர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இருந்து கூட இந்த நிகழ்ச்சிக்கு 1500 பேர் கலந்து கொண்டதாகவும் அவர்களில் 16 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் நேற்று தமிழக அரசு தெரிவித்திருந்தது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 6 பேர்கள் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டு பலியாகியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலியான இந்த ஆறு பேர்களும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் அலுவலகம் இதனை உறுதி செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் டெல்லி மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் யார் யார் என்பது குறித்த தகவல்களை உடனடியாக சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் தாங்களாகவே கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெலுங்கானா அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் இந்த குறிப்பிட்ட மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் பொதுமக்களும் அரசுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது
மலேசியா மற்றும் இந்தோனேசியா நாட்டு மதபோதகர்கள் பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்று அச்சம் ஏற்பட்டுள்ளதால் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சி போலீசாரின் அனுமதியின்றி நடத்தப்பட்டதாக வெளி வந்த தகவலை அடுத்து இந்த நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது