பெண்களின் மேம்பாட்டுக்காக 6 கேஸ் சிலிண்டர், ரூ.1,500- முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி!
- IndiaGlitz, [Tuesday,March 09 2021]
வரும் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் தற்போது அதிமுக இறுதிக்கட்டத்தை எட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழக முதல்வர் அதிமுகவின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும் இத்தேர்தல் அறிக்கையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிரின் நலனுக்காக குடும்பத்திற்கு ஆண்டு ஒன்றிற்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவித்தார். அதோடு பெண்களின பொருளாதார சமநிலையை மேம்படுத்துவதற்காக மாதம் தோறும் ஒவ்வொரு குடும்ப அட்டைத்தார பெண்களுக்கும் ரூ.1,500 ஊக்கத் தொகை கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்த அறிவிப்பிற்கு பலரும் வரவேற்பு அளித்து வரும் நிலையில் மேலும் தேர்தல் அறிக்கையில் மகளிரின் முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு பல திட்டங்களை எதிர்ப்பார்க்கலாம் எனவும் முதல்வர் வாக்குறுதி அளித்து உள்ளார். அதோடு தொகுதி பங்கீடு குறித்த இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இதுகுறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் எனக் கூறியிருந்தார்.
அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவிற்கு ஏற்கனவே 23 தொகுதிகள் ஒதுக்கியது குறித்த அறிவிப்பை அக்கட்சித் தலைமை அறிவித்து இருந்தது. அதோடு பாஜக கூட்டணிக்கு 20 தொகுதிகளை ஒதுக்கி இருந்தது. தற்போது தேமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் கூறப்படுகிறது. இதற்கான முடிவு எட்டப்படும்போது தேர்தல் வாக்குறுதி அறிக்கையும் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.