5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அரசுப் பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் சிறப்பு வகுப்பு, தேர்வுகள் நடத்த வேண்டும் எனவும், சிறப்பு வகுப்புகள் நடைபெறாத பள்ளியின் ஆசிரியர், தலைமை ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை யின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும், நகராட்சி, மாநகராட்சி, அரசு நிதியுதவி பெறும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி வேலைநாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதில் கூறப்பட்டுள்ளவற்றின் முக்கிய விவரம் வருமாறு: பள்ளியில் கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களை கண்டறிந்து பயிற்சி வகுப்புகள் நடத்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். தலைமை ஆசிரியர்கள் சிறப்பு வகுப்பிற்கான கால அட்டவணையை தயாரித்து, அதன் அடிப்படையில் தினமும் ஒரு பாடத்திற்கு சிறப்பு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் கட்டாயம் நடத்த வேண்டும். இதில், 5 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புவரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் காலை 8.30 மணி முதல் 9.15 மணி வரை சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும். மேலும், மாலையில் 4.30 மணி முதல் 5.20 மணி வரை தினமும் ஒரு பாடத்திற்கு 25 மதிப்பெண்களுக்கு என்ற அடிப்படையில் வினாத்தாள் தயாரித்து தேர்வுகள் அல்லது சிறப்பு வகுப்புகளை கட்டாயம் நடத்த வேண்டும். இதன்பின்னர் தேர்வு நடத்திய பாடத்திற்கான விடைத்தாள்களை 2 நாட்களில் மதிப்பீடு செய்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
தேர்வு குறித்த மதிப்பெண்களை பதிவேட்டில் இணைத்து தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெற வேண்டும். மேலும், ஒவ்வொரு மாதமும் மாணவர்களின் பெற்றோரிடம் கையெழுத்து பெற்று இருக்க வேண்டும். மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை ஆசிரியர்கள் பராமரித்து வர வேண்டும்.
ஆய்வு அலுவலர்கள் பள்ளியினை பார்வையிடும்போது இது குறித்ததகவல்களை அளிக்க வேண்டும். தலைமை ஆசிரியர், சிறப்பு வகுப்பிற்கு ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தனித்தனி வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும். சிறப்பு வகுப்புகள் நடைபெறாத பள்ளியின் ஆசிரியர், தலைமை ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Sai Surya
Contact at support@indiaglitz.com
Comments