57 சிறுமிகளுக்கு கொரோனா, 5 சிறுமிகள் கர்ப்பம்: சிறுமிகள் காப்பகம் குறித்த அதிர்ச்சி தகவல்

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் நகரில் உள்ள சிறுமிகள் காப்பகம் ஒன்றில் 57 சிறுமிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் அதில் 5 சிறுமிகள் கர்ப்பம் அடைந்து இருப்பதாகவும் வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமின்றி ஒரு அந்த காப்பகத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு எச்ஐவி பாதிப்பும் ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது.

இது குறித்து கான்பூர் மாவட்ட கலெக்டர் விளக்கம் அளித்தபோது ’இந்த காப்பகத்தில் மொத்தம் 7 சிறுமிகள் கர்ப்பமாக இருந்ததாகவும் அதில் ஐவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், ஆனால் கர்ப்பமாக உள்ள 7 சிறுமிகளும் காப்பகத்துக்கு அழைத்து வரப்பட்டபோதே கர்ப்பமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் சிறுமிகள் மீது பாலியல் ரீதியாக ஏதாவது துன்புறுத்துதல் நடந்ததா என்பது குறித்து விசாரணை செய்து வருவதாகவும் கான்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த சிறுமிகள் காப்பகத்தில் கொரோனா தொற்று இருப்பதாக அறிந்ததும் அனைத்து சிறுமிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இதில் 57 சிறுமிகளுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறிய போது ’இந்த சிறுமியின் காப்பகத்தில் பாலியல் குற்றம் நடந்து இருக்கும் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து தீவிர விசாரணை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர் என்ற நகரில் உள்ள ஒரு சிறுமிகள் காப்பகத்தில் அந்த காப்பகத்தை நடத்தியவர்களே அங்கு உள்ள சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பது போல் இந்த சிறுமிகள் காப்பகத்திலும் சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார்களா? என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.