50 ஆண்டு பழமையான திரையரங்கம் மூடல்: வடசென்னை ரசிகர்கள் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Monday,August 31 2020]

வட சென்னையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த திரையரங்கம் நாளை முதல் மூடப்படுவதாக வெளிவந்துள்ள செய்தியால் அப்பகுதி சினிமா ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வட சென்னையில் கடந்த 53 ஆண்டுகளாக இயங்கிவரும் திரையரங்கம் அகஸ்தியா. பழமை வாய்ந்த இந்த 70mm திரையரங்கம் கடந்த 1967ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. 1004 இருக்கைகள் கொண்ட இந்த திரையரங்கில் முதன்முதலாக பாமா விஜயம் என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. மேலும் இந்த திரையரங்கத்தில் பெரும்பாலும் கமல்ஹாசன் படங்கள் அதிகமாக ரிலீசாகும் என்பதும், கமலஹாசன் நடித்த ’விக்ரம்’ என்ற படத்தில் ஒரு காட்சி கூட இந்த திரையரங்கத்தில் தான் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வடசென்னை சினிமா ரசிகர்களின் விருப்பத்துக்குரிய திரையரங்கமாக இருந்து வந்த அகஸ்தியா திரையரங்கம் ஊரடங்கு காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த திரையரங்கம் நிரந்தரமாக மூடுவதாக வெளிவந்த அறிவிப்பினால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திரையரங்கினால் பெரும் பேரையும் புகழையும் பெற்ற மாஸ் நடிகர்கள் திரையரங்குகளை காப்பாற்ற முன்வர வேண்டும் என்பதே சினிமா ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.