UPயில் மர்மக்காய்ச்சல்… உயிரிழப்பு 50ஐ தாண்டிய அவலம்!
- IndiaGlitz, [Tuesday,September 07 2021]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மர்மக்காய்ச்சல் பரவி இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாம் அலை பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படும் அம்மாநிலத்தில் தற்போது மர்மக்காய்ச்சல் பீதி ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
உத்திரப்பிரதேசத்தின் பாலியா, மதுரா மற்றும் மொராதாபாத் போன்ற ஒரு சில பகுதிகளில் மர்மக்காய்ச்சல் பரவி வருகிறது. இதுகுறித்து ஆய்வுசெய்த அதிகாரிகள் டெங்கு மற்றும் பூஞ்சை தாக்குதல் (Scrub Typhus) நோய்க்கான அறிகுறிகளைக் காட்டுவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் மர்மக்காய்ச்சலைப் பற்றி அறிய மத்தியச் சுகாதாரத்துறை ஆராய்ச்சிக்குழு அந்த மாநிலத்திற்கு விரைந்து இருக்கிறது.
மர்மக்காய்ச்சலால் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மாநில அரசு சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தத் துவங்கியுள்ளது. அதேபோல மாநிலத்தின் 75 மாவட்டங்களிலும் நோய்த் தீவிரத்தைக் கண்காணிக்க நோடல் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். ஏற்கனவே கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாம் அலை தாக்கம் குறித்த பீதி இருக்கும் இந்த மாநிலத்தில் தற்போது மர்மக்காய்ச்சல் பயம் பொதுமக்களிடமும் ஏற்பட்டு இருக்கிறது.