கொரோனா எதிரொலி: சென்னையில் 500 கிலோ சிக்கன் பக்கோடா இலவசம்
- IndiaGlitz, [Sunday,March 15 2020]
சென்னை ஆலந்தூரில் இலவசமாக 500 கிலோ சிக்கன் பக்கோடா வழங்கப்பட்டன என்பதும் இதனை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் இருவர் கோழிக்கடை நடத்தி வந்தனர். கோழிக்கறியில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்தி பரவியதால் இவர்களுக்கு விற்பனை மந்தமாக இருந்தது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் கோழிக்கறியில் இருந்து பரவவில்லை என்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக 500 கிலோ கோழிக்கறியில் இருந்து செய்யப்பட்ட சிக்கன் பக்கோடவை பொதுமக்களுக்கு இலவசமாக இந்த கடைக்காரர்கள் வழங்கினார்கள். இதனை ஏராளமானோர் வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.
இதனை அடுத்து கோழிக்கறியில் இருந்து கொரோனா வைரஸ் பரவவில்லை என்ற விழிப்புணர்வு தற்போது பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் இனிமேல் தங்களுடைய வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும் என்று தாங்கள் நம்புவதாகவும் இந்த கடையை நடத்தி வருபவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாக சென்னையை அடுத்த பொன்னேரி என்ற பகுதியில் 1 கிலோ சிக்கன் பிரியாணி ஒரு ரூபாய்க்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.