அசால்ட்டாக வேனில் வைத்து 50 மூட்டை குட்கா கடத்தல்!!! சோதனையில் பறிமுதல்!!!

  • IndiaGlitz, [Wednesday,August 26 2020]

 

வேலூர் பகுதியில் 50 மூட்டை குட்காவை வேனில் வைத்துக் கடத்தியதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. வேலூர் மாவட்டம் கொணவட்டம் பகுதியில் சமூக விரோதிகள் 50 மூட்டை குட்கா பொருட்களை வேனில் வைத்துக் கடத்தியபோது காவல் துறையினர் பறிமுதல் செய்ததாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் இக்கடத்தலில் சம்பந்தப்பட்ட 5 பேரை அம்மாவட்ட காவல் துறையினர் கைது செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து குட்கா பொருட்களை வேலூர் மாவட்டத்திற்கு கொண்டு செல்வதும் தெரிய வந்திருக்கிறது. இதனால் காஞ்சிபுரம் பகுதியில் காவல் துறையினர் அதிரடி சோதனையைத் தற்போது நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அதைப்போல கடலூர் மாவட்டம் கே.என் பேட்டை என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 8 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

அதையடுத்து போலீஸார் பல இடங்களிலும் தேடுதல் வேட்டைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. காரணம் கொரோனா பேரிடர் காலத்தில் மதுக்கடைகள் பல மாதங்களாக மூடிக்கிடந்தன. சென்னையில் கடந்த சில தினங்களாகத்தான் மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் மது கிடைக்காத நேரங்களில் பலரும் குட்கா பொருட்களை விரும்புவதாகவும் மேலும், பதுக்கி விற்பனை செய்வதற்கு குட்கா பொருட்கள் எளிதாக இருப்பதால் கடத்தல் அதிகரித்து இருப்பதாகவும் சமூகநல ஆர்வலர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.