ஊரடங்கில் வெளியே சுற்றினால் 5 ஆண்டு சிறை: மரண பீதியை ஏற்படுத்தும் நாடு!!!
- IndiaGlitz, [Friday,June 19 2020]
கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன. அந்த வகையில் சில நாடுகள் கடுமையான ஊரடங்கு விதிமுறைகளையும் அமல் படுத்தி இருக்கிறது. மீறுவோர் மீது வழக்குப் பதிவு செய்வது, அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படுகின்றன. இதையெல்லாம் தாண்டி சிலி நாட்டில் தற்போது தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியவர்கள் விதிகளை மீறி வெளியே சுற்றிக்கொண்டு இருந்தால் 5 ஆண்டு சிறையில் இருக்க வேண்டி வரும் என்ற நடைமுறையை கொண்டு வந்திருக்கிறது.
சிலி நாட்டின் அதிபர் செபாஸ்டியன் பினெரா மக்கள் ஊரடங்கு விதிமுறைகளை முறையாகக் கடைபிடிக்க வேண்டும். ஒருவேளை தவறினால் சிறைத் தண்டனை விதிக்கப்படுவார்கள் என்று எச்சரித்து உள்ளார். அந்நாட்டில் இதுவரை 2 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த 3 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு இருக்கிறது.
அறிகுறிகளுடன் இருப்பவர்கள், வேறு இடங்களில் இருந்து வந்தவர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் தற்போது அவர்களது வீடுகளில் தனிமைப் படுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றனர். இப்படி தனிமைப் படுத்தலில் இருக்கும்போது இரவு நேரங்களில் வெளியே செல்வதையும் சிலர் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். இதனால் இரவு நேரங்களில் அந்நாட்டு இராணுவம் கண்காணித்தல் பணியில் ஈடுபட்டு வருகிறது. முன்பு வாரத்திற்கு 5 முறை வெளியே சென்று வரலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது 2 முறை மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்த விதிகளை மீறி வெளியே சென்று வந்தால் அந்நாட்டில் இந்திய மதிப்பில் 9 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டி வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.