டெல்லியில் இருந்து பெங்களூருக்கு தனியாக வந்த 5 வயது சிறுவன்: சக விமான பயணிகள் நெகிழ்ச்சி
- IndiaGlitz, [Tuesday,May 26 2020]
டெல்லியில் இருந்து பெங்களூருக்கு 5 வயது சிறுவன் ஒருவன் தனியாக விமானத்தில் பயணம் செய்தது சக பயணிகளை நெகிழ வைத்துள்ளது
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு, அதன் பின்னர் நான்கு முறை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவு வரும் 31ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதை அடுத்து நேற்று முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கியது
இந்த நிலையில் டெல்லியில் இருந்து பெங்களூருக்கு 5 வயது சிறுவன் ஒருவன் சிறப்பு பிரிவு மூலமாக விமானத்தில் பயணம் செய்துள்ளார். 5 வயது சிறுவன் தனியாக விமானத்தில் பயணம் செய்தது சக பயணிகளை நெகிழ வைத்துள்ளது. இந்த சிறுவன் கோடை விடுமுறைக்காக டெல்லியில் உள்ள தனது தாத்தா பாட்டி வீட்டிற்கு கடந்த பிப்ரவரியில் சென்றதாகவும் இதனிடையே திடீரென கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அந்த சிறுவன் கடந்த மூன்று மாதங்களாக டெல்லியிலேயே சிக்கிக் கொண்டதாகவும் தெரிகிறது
இதனையடுத்து தனது பெற்றோரை பார்ப்பதாக தவித்துக் கொண்டிருந்த அந்த சிறுவன் நேற்று விமானம் இயங்கத் தொடங்கியதும் டெல்லியில் இருந்து விமானத்தில் அவரது தாத்தா அந்த சிறுவனை பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர். நேற்று பெங்களூர் வந்த அந்த சிறுவன், மூன்று மாதங்களுக்கு பின்னர் தனது பெற்றோரை சந்தித்தான் என்பது குறிப்பிடத்தக்கது