மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு… ஆளுநரை சந்தித்து அழுத்தம் கொடுத்த அமைச்சர்கள்!!!
- IndiaGlitz, [Tuesday,October 20 2020]
MBBS, BDS உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு) குறித்த விவாதம் தமிழகத்தில் தொடர்ந்து சர்ச்சையை எற்படுத்தி வந்தது. இந்நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக புதிய உள்இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதனால் மருத்துவப் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த முடியும் என்றும் கூறப்பட்டது.
இத்திட்டத்திற்காக கடந்த ஜுலை மாதம் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. அந்த ஒப்புதலைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தமிழக அரசு சார்பில் அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கான மசோதாவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழக அமைச்சரவையில் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த அவசரச் சட்டம் கவர்னரின் ஒப்புதலைப் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.
தமிழக அரசு தனது அறிக்கையில் மருத்துவப் படிப்புக்கான உள்இட ஒதுக்கீடு மசோதா உடனடியாக ஒப்புதல் பெறப்பட்டு இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கான ஒதுக்கீட்டில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் எனக் கூறியது. ஆனால் தற்போது 2020 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு நடைபெற்று முடிந்து அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் உள்இட ஒதுக்கீட்டுக்கான ஒப்புதலை குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருக்கிறது.
இதனால் மருத்துப் படிப்புக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெறுவதும் காலதாமம் ஏற்படும் எனக் கருதப்படும் நிலையில் தற்போது இந்த விவகாரம் தொடர்பாக 5 அமைச்சர்கள் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கேபி அன்பழகன், செங்கோட்டையன், சிவி சண்முகம் ஆகியோர் தற்போது கவர்னரை நேரில் சந்தித்து இருக்கின்றனர். அந்த சந்திப்பின்போது 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவச் சீட்டில் உள்இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவிற்கு விரைந்து ஒப்புதல் வழங்குமாறும் அவர்கள் வலியுறுத்தினர்.
முன்னதாக ஒரு மாத காலம் ஆகியும் கவர்னர் உள்இட ஒதுக்கீடு மசோதா குறித்து எந்த முடிவையும் எடுக்காதது ஏன்? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி இருந்தது. அதோடு அரசியல் கட்சி தலைவர்கள் தமிழக ஆளுநருக்கு உரிய அழுத்தம் தரவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து தற்போது 5 அமைச்சர்கள் கவர்னரை நேரில் சந்தித்து உள்இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு விரைந்து ஒப்புதல் வழங்குமாறு அழுத்தம் கொடுத்து இருக்கின்றனர்.