கஞ்சா செடி வளர்ப்பு? ஆன்லைனில் பார்த்து, கல்லூரி மாணவர்கள் செய்த அட்டகாசம்!
- IndiaGlitz, [Monday,June 26 2023]
கர்நாடக மாநிலத்தில் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சிலர் வாடகை வீட்டெடுத்து அதில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் தமிழக மாணவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவமோகா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சிலர் குருபுரா பகுதியில் வாடகை வீடெடுத்து தங்கியுள்ள நிலையில் அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட போலீசார், திடீர் சோதனை ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் அவர்களிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து மேலும் சில திடுக்கிடும் தகவலைத் தெரிவித்துள்ளனர்.
அதாவது சிவமோகா பகுதியில் இயங்கிவரும் மருத்துவக் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு பயிலும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 3 பேர், கஞ்சா செடி வளர்ப்பது எப்படி என்பது குறித்து ஆன்லைனில் கற்றுக் கொண்டுள்ளனர். இதையடுத்து வாடகை வீடெடுத்த அந்த மாணவர்கள் ஆன்லைனிலேயே கஞ்சா விதைகளையும் ஆர்டர் செய்து தாங்கள் தங்கியிருந்த வீட்டின் ஒரு அறையில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளனர்.
இதற்காக செயற்கையான முறையில் வீட்டிற்குள்ளேயே கூடாரம் அமைத்து, காற்றோட்டத்திற்காக 6 மின் விசிறிகளையும் ஓட விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த முறையில் கடந்த 3 மாதங்களாக மூன்று மாணவர்கள் சேர்ந்து கஞ்சாவை அறுவடை செய்து குருபுரா பகுதியில் குடியிருந்த தங்களது சக வகுப்பு மாணவர்களான 2 பேரிடம் கொடுத்து விற்பனை செய்துள்ளனர்.
அந்த வகையில் தற்போது 2 வீடுகளில் சோதனை நடத்திய போலீசார் அவர்களிடம் இருந்து 227 கிராம் கஞ்சா இலைகளையும் மேலும் 1.5 கிலோ எடைகொண்ட கஞ்சா செடி மற்றும் விதைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 19 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வாடகை வீடெடுத்து கஞ்சா வளர்த்த மாணவர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. ஆன்லைனில் கஞ்சா வளர்ப்பு குறித்து அறிந்துகொண்ட மாணவர்கள் செய்த இந்தச் செயல் தற்போது கர்நாடக பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.