ஒரு பெண் மருத்துவர் உள்பட 5 மருத்துவர்களுக்கு கொரோனா: சென்னையில் பரபரப்பு

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக கடந்த ஐந்து நாட்களாக தமிழகத்தில் தினமும் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பொதுமக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற இரவும் பகலும் போராடி வரும் மருத்துவர்களுக்கும் கொரோனா பரவி வருகிறது என்பதும் இதில் ஒருசில மருத்துவர்கள் பலியாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி செய்தியும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி மக்களுக்காக கொரோனாவிடம் போராடி பலியான மருத்துவரின் இறுதிச்சடங்கை நடத்த கூட எதிர்ப்பு கிளம்பிய அவலமும் நடந்தது.

இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரே நாளில் ஒரு பெண் மருத்துவர் உட்பட 5 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் மருத்துவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவரும், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் நால்வருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பொதுமக்களை கொரோனாவில் இருந்து காத்து வரும் மருத்துவர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் அரசு வழங்கி அவர்களை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்,