ஆக்சிஜன் பற்றாக்குறையால் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு! 3 ஆவது சம்பவம்!
- IndiaGlitz, [Monday,April 26 2021]
ஹரியாணா மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழந்து உள்ளதாக அவர்களது உறவினர்கள் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாநிலத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு சரிச்செய்யப்பட்டு உள்ளது என அம்மாநில தலைமை செயலாளர் விஜய் வர்த்தன் தெரிவித்து உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சர் கங்காராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 25 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த விவகாரத்தை அந்த மருத்துவமனையின் தலைமை அதிகாரியே தெரிவித்து இருந்தார். அதையடுத்து நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்த விவாதம் எழுப்பப்பட்டது. இந்நிலையில் நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் உள்ள நீலகண்ட மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 நோயாளிகள் உயிரிழந்த விவகாரத்தை அந்த மருத்துவமனை நிர்வாகமும் ஒப்புக்கொண்டு உள்ளது.
அதேபோல ஹரியாணா மாநிலத்தின் குர்கவானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 நோயாளிகள் உயிரிழந்து உள்ளனர். இவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தான் உயிரிழந்தனர் என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் அந்த மாநில அரசு தீவிர நோய்த்தொற்றின் காரணமாக உயிரிழந்து விட்டதாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. மேலும் இதே மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 25 நோயாளிகள் உயிரிழந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது ஹரியாணா மாநிலத்தில் 3 ஆவது முறையாக ஹிசார் பகுதியில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழந்து உள்ளனர். இந்த மாநிலத்தைத் தவிர டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் கடும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.