'49 ஓ' திரைவிமர்சனம் கவுண்டமணியின் கர்ஜனைக்கு ஒரு 'ஓ'
Send us your feedback to audioarticles@vaarta.com
நீண்ட இடைவெளிக்கு பின்னர் நகைச்சுவை அரசர் கவுண்டமணி, ரீ-எண்ட்ரி ஆகியுள்ளார். அதுவும் கதாநாயகனாக...இத்தனை ஆண்டுகள் ஓய்வில் இருந்த கவுண்டமணி, ஒரு அறிமுக இயக்குனர் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததில் இருந்தே, இந்த படத்தில் ஏதோ புதுமையாக இருக்கின்றது என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். அந்த எதிர்பார்ப்பை கவுண்டமணியும், அறிமுக இயக்குனர் ஆரோக்கியதாஸும் பூர்த்தி செய்தார்களா? என்பதை பார்ப்போம்.
விவசாயத்தை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தும் கிராமம் ஒன்றின் அருகில் ரயில்வே நிலையம் வருவதை முன்கூட்டியே அறிந்த அந்த பகுதியின் எம்.எல்.ஏ, மகன், இந்த விஷயம் வெளியே தெரிவதற்குள் விவசாயிகளின் நிலத்தை சொற்ப விலைக்கு வாங்கி, அந்த இடத்தில் பிளாட் போட்டு விற்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். எல்லா விவசாயிகளுக்கும் இருக்கும் பிரச்சனையான கடனை காரணம் காட்டி, அனைத்து விவசாயிகளிடம் நயவஞ்சகமாக, அவர்களுடைய நிலத்திற்கு ரூ.2 லட்சம் மட்டும் அட்வான்ஸ் பணம் கொடுத்து 'பவர் எழுதி வாங்கிவிடுகிறார் எம்.எல்.ஏவின் மகன். மீதிப்பணத்தை கேட்டு விவசாயிகள் சென்றபோது, நிலத்தை பிளாட் போட்டு விற்க போகின்றோம். நிலம் விற்ற பின்னர்தான் மீதிப்பணத்தை தருவோம் என்று கூறி மிரட்டி விரட்டியடிக்கின்றார்.
இந்த பிரச்சனையை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வந்த அதே ஊரில் வாழும் கவுண்டமணி, ஏமாற்றப்பட்ட விவசாயிகளுக்காக போராட்டத்தில் இறங்குகிறார். இந்த நேரத்தில் எம்.எல்.ஏ இறந்துவிட, அந்த ஊருக்கு இடைத்தேர்தல் வருகிறது. இறந்த எம்.எல்.ஏவின் மகன் ஆளுங்கட்சி சார்பி்லும், எதிர்க்கட்சி சார்பில் பாலாசிங்கும் தேர்தலில் நிற்கின்றார். அரசியல்வாதிகள் அனைவரும் மக்களை தேடி வரும் ஒரே நேரம், தேர்தல் நேரம்தான். இந்த இடைத்தேர்தலை காரணமாக வைத்து மறைந்த எம்.எல்.ஏவின் மகனிடம் ஏமாந்த விவசாயிகளின் நிலத்தை மீட்க, அரசியல்வாதிகளின் பாணியிலே திட்டங்கள் போட்டு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரண்டு கட்சி வேட்பாளர்களையும் கவுண்டமணி திணறடிக்கின்றார். கவுண்டமணி தீட்டிய திட்டங்கள் என்னென்ன? அவர் விவசாயிகளுக்கு நிலத்தை மீட்டு கொடுத்தாரா? இந்த விஷயத்திற்கும் '49 ஓ' என்ற டைட்டிலுக்கும் என்ன சம்பந்தம் என்பதை கிளைமாக்ஸில் விளக்குகிறார் இயக்குனர் ஆரோக்கியதாஸ்.
முதலில் இயக்குனர் ஆரோக்கியதாஸை பார்த்துவிடுவோம். குத்துப்பாட்டு இல்லை, கனவில் ஹீரோவும், ஹீரோயினியும் வெளிநாட்டில் கவர்ச்சியான ஆடைகள் அணிந்து ஆட்டம் போடும் பாடல்கள் இல்லை, அதிரடியான சண்டைக்காட்சி இல்லை, இரட்டை அர்த்த வசனம் இல்லை, காமெடிக்கு என தனி டிராக் இல்லை, கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர் இல்லை.ஹீரோயின் இல்லை. இத்தனை இல்லைகள் இருந்தும் ஒரு படத்தை போரடிக்காமல் இரண்டரை மணி நேரம் பார்க்க வைக்க முடிகிறது என்றால், அதற்கு இயக்குனர் எடுத்துக்கொண்ட அழுத்தமான சப்ஜெக்ட்தான் ஒரே காரணம். சமகால அரசியலை தாக்கும் காட்சிகள், 49ஓ என்றால் என்ன என்று படித்த பலருக்கே தெரியாத நிலையில், ஒரு சாதாரண பாமரனின் பார்வையில் அதற்கு கொடுத்த விளக்கம், யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம் என்பதை நிறுத்த அவர் கூறும் ஆலோசனை, இவை அனைத்துமே தமிழ் சினிமாவிற்கு புதிது.
இந்தியா ஒரு விவசாய நாடு என்று சொல்லிக்கொண்டே விவசாயிகளுக்கு அரசியல்வாதிகள் செய்யும் கொடுமைகளை சாட்டையடி வசனங்களின் மூலம் வெளிப்படுத்தியுள்ள இயக்குனரின் தைரியம் மற்றும் முயற்சி ஆகியவை பாராட்டுக்குரியது. எல்லாவற்றிற்கும் மேலாக இவ்வளவு பெரிய விஷயத்தை சொல்ல அவர் கவுண்டமணியை தேர்வு செய்த புத்திசாலித்தனத்திற்கும் ஒரு சபாஷ்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, அரசியல் சாசனம், தேர்தல் ஆணையம், மது ஒழிப்பிற்காக அரசியல் கட்சிகள் போராடுவது போன்ற பல விஷயங்களை நய்யாண்டி செய்யும் ஒரு சர்ச்சைக்குரிய கேரக்டரை தற்போது முன்னணியில் இருக்கும் எந்த ஒரு நடிகரும் ஏற்க தயங்குவார்கள். ஆனால் இந்த கேரக்டரை தைரியாமாக ஏற்றுக்கொண்ட கவுண்டமணி ஒற்றை ஆளாய் நின்று படம் முழுவதையும் தாங்கி நிற்கிறார். சிங்கம் வயதானலும் சிங்கம்தான் என்பதை போல இந்த வயதிலும் கவுண்டமணியின் கணீர் குரலில் வெளிப்படும் வசனங்களுக்கு வலு அதிகம் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. 20 வருடங்களுக்கு முன்பு இருந்த கவுண்டமணியின் நக்கல் நையாண்டி, எகத்தாளம், பாடி லாங்குவேஜ் ஆகியவை கொஞ்சமும் குறையாமல் இருப்பது ஆச்சரியத்தை அளிக்கின்றது. அதிலும் விளம்பரப்படம் எடுக்கும் இயக்குனராக வரும் 'மொட்டை ராஜேந்திரனை' அவர் படுத்தும்பாடு வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றது. பஸ் நிலையத்திற்கு வெகு அருகில், ரயில் நிலையத்திற்கு வெகு அருகில் என்று கூறி பிளாட் போட்டு விற்கும் ரியல் எஸ்டேட் ஓனர்களுக்கு கவுண்டமணி கொடுக்கும் அதிர்ச்சி வைத்தியம், படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு சிரிப்பு வைத்தியம்.
வில்லனாக வரும் எம்.எல்.ஏவின் மகன், எதிர்க்கட்சி வேட்பாளராக நடித்திருக்கும் பாலாசிங், இயக்குனராக நடித்துள்ள 'மொட்டை ராஜேந்திரன், ஆகியோர்கள் தங்கள் கேரக்டரை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். இசையமைப்பாளர் கே இசையில் 'அம்மா போலே' என்ற பாடல் மட்டும் கேட்கும்படி இருக்கின்றது. பிரமாண்டமாகவும் இல்லாமல், சொதப்பலாகவும் இல்லாமல் கதைக்கு என்ன தேவையோ அதற்கேற்ற பின்னணி இசையயை அமைத்துள்ளார் 'கே'. ஆதி கருப்பையாவின் ஒளிப்பதிவில் கிராமத்து பசுமையும், வறுமையும் மாறி மாறி அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் பாதியில் மட்டும் திரைக்கதையில் கொஞ்சம் தொய்வு ஏற்படுகிறது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, கவுண்டமணியின் குரூப் என மாறி மாறி தேர்தல் பிரச்சாரம் செய்யும் காட்சிகள் கொஞ்சம் போரடிக்கின்றது. எடிட்டர் இதில் கொஞ்சம் கத்தரி வைத்திருக்கலாம். தன்னுடைய நிலத்தை சுடுகாடாக மாற்ற அதிகாரிகளுக்கு கவுண்டமணி லட்ச லட்சமாக லஞ்சம் கொடுப்பதை நம்ப முடியவில்லை. ஆனாலும் கிளைமாக்ஸில் படம் நிமிர்ந்து நிற்பதால் அது ஒரு குறையாக தெரியவில்லை.
ஓட்டு என்பது ஒவ்வொருவரின் உரிமை, அதை எப்போது விற்க ஆரம்பித்துவிட்டோமோ, அப்போதே அரசியல்வாதி செய்யும் தவறை சுட்டிக்காட்டும் தகுதியை இழந்துவிடுகிறோம், அஞ்சு நிமிசம் மட்டும் உண்ணாவிரதம் இருங்க தலைவரே அதுதான் இப்போதைய டிரெண்ட், மக்களுக்கு கெடுதல் நடந்தால் எந்த அரசியல்வாதியும் வரமாட்டாங்க..ஆனால் மக்களுக்கு நல்லது நடந்தா அதை தடுக்கறதுக்கு எல்லா அரசியல்வாதியும் ஒண்ணு சேர்ந்து வருவாங்க...எங்க ஓட்டை ஏன் நாங்க யாரு யாருக்கோ போட்டு வீணாக்கனும், எங்க ஓட்டை எங்களுக்கே போட்டுக்குறோம், ஒரு தேர்தலில் நோட்டா என்னும் '49 ஓ' ஜெயிச்சா என்ன நடக்கும்..ஒரு விவசாயி அறுவடை செய்றதுக்கு மட்டும்தான் குனியனும், மற்ற இடங்கள்ல்ல குனிஞ்சா ஒரேயடியா குனிய வச்சிருவாங்க, அரைப்படம் நடிச்ச நடிகரெல்லாம் அரசியல் கட்சி ஆரம்பிச்சிடராங்கப்பா... போன்ற பல நய்யாண்டியுடன் கலந்த அர்த்தமுள்ள வசனங்கள் படம் முழுவதும் ஆங்காங்கே பரவிக்கிடக்கின்றது.
மொத்தத்தில் '49 ஓ, 'ஓ' போட வைக்கின்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments