ஊரடங்கு உத்தரவு எதிரொலி: பெங்களூரில் வேலையிழந்த 496 ஐடி ஊழியர்கள்
- IndiaGlitz, [Friday,April 10 2020]
ஊரடங்கு உத்தரவு காரணமாக தின தொழிலாளர்கள் உள்பட பல்வேறு தொழிலாளர்கள் வேலையின்றி வருமானமின்றி பசியும் பட்டினியுமாக இருக்கும் நிலையில், இந்தத் தாக்கம் ஐடி தொழிலாளர்களையும் பாதித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட போதே தனியார் நிறுவனங்கள் எந்த ஒரு பணியாளர்களையும் வேலையை விட்டு நீக்க கூடாது என்றும் அவர்களுக்கு உரிய சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஆனால் அரசின் அறிவுறுத்தலை மீறி பெங்களூரில் உள்ள ஒரு சில ஐடி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக சிஐடியு சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து சிஐடியு பொதுச்செயலாளர் தபன்சிங் அவர்கள் தொழிலாளர் நல வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அரசின் உத்தரவை மீறி ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் 496 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கிய நிறுவனங்கள் குறித்த விபரங்களை தொழிலாளர் துறை அமைச்சகத்துக்கு கடிதமாக எழுதி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி 496 பேர் வேலையிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.