இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவர் உயிரிழப்பு… மேலும் பல அதிர்ச்சி தகவல்கள்!

இந்தியாவில் கடந்த 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அவசரகால நோக்கில் அனுமதிக்கப்பட்ட இத்திட்டத்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் கோவிஷீல்ட் மற்றும் இந்தியாவின் கோவேக்சின் எனும் இரண்டு மருந்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒரு வார்டு பாய் ஒருவர் நேற்று திடீரென உயிரிழந்ததாகப் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

உத்திரப் பிரதேசத்தின் மொராதாபாத் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் வேலைப் பார்த்து வரும் 46 வயது வார்டு பாய் மஹிபால் சிங். இவருக்கு கடந்த சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட அவர் இரவுநேர பணியிலும் ஈடுபட்டு இருக்கிறார். நன்றாக வேலைப் பார்த்துவிட்டு, வீடு திரும்பிய மஹிபாலுக்கு நேற்று மார்பு வலி மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டதாக குடும்ப உறுப்பினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் உடல் பாதிப்பு அதிகரித்த நிலையில் அவர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மஹிபால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்து உள்ளார். இதையடுத்து கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்படாத மஹிபால் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு திடீரென உயிரிழந்த உள்ளார். இந்நிலையில் மஹிபாலின் குடும்ப உறுப்பினர்கள் அவர் நல்ல உடல்நிலையில் இருந்ததாகவும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகே அவருக்கு உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்து உள்ளனர். இதனால் உத்திரப் பிரதேசத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

நேற்று வரை இந்தியா முழுவதும் 2.24 லட்சம் சுகாதாரப் பணியாளர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டு இருப்பதாகவும் மத்தியச் சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. பக்கவிளைவுகளினால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வடக்கு ரயில்வே மருத்துவமனை மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.