ஐடி சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணம். 85% வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பட்டுவாடா

  • IndiaGlitz, [Saturday,April 08 2017]

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக அம்மா கட்சியின் வேட்பாளர் டிடிவி தினகரன் தரப்பினர் வாக்காளர்களுக்கு பணத்தை தண்ணீராய் இரைத்து கொண்டிருக்கும் தகவல்கள் காரணமாக நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்பட பல இடங்களில் ஐடி ரெய்டு நடந்தது. இந்த ரெய்டில் ஒரு முக்கிய ஆவணம் சிக்கியிருப்பதாகவும், அதில் ஆர்.கே.நகரில் உள்ள மொத்த வாக்காளர்களில் 85 சதவிகிதம் பேருக்கு பணப்பட்டுவாடா செய்ய அதிமுக அம்மா அணி திட்டமிட்டிருந்ததும், அதற்காக ரூ.89.65 கோடி வழங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதைவிட அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக அந்த ஆவணத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் பெயர்கள் உள்ளன. இத்தனை வாக்காளர்களுக்கு இந்த நபர் பொறுப்பு என அந்த ஆவணத்தில் ஒவ்வொருவரின் பெயரும் குறிப்பிடப்பட்டு, அவர்கள் வசம் ஒப்படைக்கப்படும் பணமும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொறுப்பாளர்கள் ஒவ்வொருவரிடமும் 10 கோடிக்குக் மேல் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மொத்தம் ரூ.89 கோடிக்கும் மேல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலி பணப்பட்டுவாடா செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளதால் தற்போது அனைவரின் பார்வையும் தேர்தல் ஆணையம் பக்கம் திரும்பியுள்ளது. அரவக்குறிச்சி, தஞ்சைத் தொகுதிகளைப் போல ஆர்.கே.நகரிலும் தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் ஆணையம் முடிவெடுக்குமா? அல்லது பணப்பட்டுவாடா செய்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தேர்தல் கமிஷனின் அடுத்தகட்ட நடவடிக்கையை ஆர்.கே.நகர் வாக்காளர்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே எதிர்பார்த்து காத்திருக்கின்றது.