40 வயதில் குழந்தை பெற்ற 'கோலங்கள்' சீரியல் நடிகை: குவியும் வாழ்த்துக்கள்!
- IndiaGlitz, [Sunday,October 30 2022]
நடிகை தேவயானி நடித்த ‘கோலங்கள்’ என்ற சீரியல் உள்பட பல சீரியல்களில் நடித்த நடிகை ஒருவர் 40 வயதில் குழந்தை பெற்று உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தேவயானி நடித்த ‘கோலங்கள்’ என்ற சீரியலில் கங்கா என்ற கேரக்டரில் நடித்திருந்தவர் நடிகை சந்திரா லட்சுமணன். இவர் தமிழ் திரையுலகில் ‘மனசெல்லாம்’ ’ஆதிக்கம்’ ’தில்லாலங்கடி’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின்னர் சின்னத்திரைக்கு வந்த சந்திரா ’கோலங்கள்’ சீரியல் ஹிட்டானதை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ’காதலிக்க நேரமில்லை’ என்ற சீரியலில் நடித்தார். அதன்பின்னர் சன் டிவியில் ’வசந்தம்’ ’மகள்’ ஆகிய சீரியல்களிலும் ஜீ டிவியில் ’துளசி’ என்ற சீரியல் உள்பட பல சீரியல்களில் நடித்தார். தற்போது அவர் மலையாளத்தில் ஒரு சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் டோஸ் கிரிஸ்டி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சந்திரா லட்சுமணனுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் சின்னத்திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சந்திராவுக்கு திருமணம் நடந்தபோது 38 வயது என்பதும் தற்போது அவருக்கு 40 வயது என்பது குறிப்பிடத்தக்கது.