கல்வான் தாக்குதலில் 40 சீன இராணுவ வீரர்கள் உயிரிழப்பா??? சீனா என்ன சொல்கிறது???

  • IndiaGlitz, [Wednesday,June 24 2020]

 

கடந்த ஜுன் 15 ஆம் தேதி கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கல்வான் மலை பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடைபெற்ற கைக்கலப்பில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்தத் தகவலை அதிகாரப் பூர்வமாக இந்திய பாதுகாப்புத் துறை வெளியிட்டது. ஆனால் சீனாவின் தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவலை இதுவரை சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிடவில்லை. ஆனால் அமெரிக்க உளவுத்துறை சீனா வீரர்கள் 35 பேர் உயிரிழந்தனர் என்ற தகவலை வெளியிட்டு இருந்தது. இதுகுறித்து சீனாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளரிடம் கேள்வியும் எழுப்பப் பட்டது. ஆனால் அவர் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல மறுத்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கல்வான் தாக்குதலில் சீன இராணுவ வீரர்கள் 43 பேர் உயிரிழந்து விட்டனர் என்ற பரபரப்பு செய்தி சில நாட்களாக உலா வந்து கொண்டு இருக்கிறது.

தற்போது இந்தத் தகவலையும் சீனாவின் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் லிஜியன் சோ மறுத்து இருக்கிறார். தற்போது இந்தியா-சீன எல்லைக் கட்டுகோட்டு பகுதியில் உள்ள நிலைமையை சரி செய்வதற்காக இருநாட்டு இராணுவ கமெண்டர்களும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இராணுவ கமெண்டர் ஹரிந்தர் சிங் கலந்து கொண்டார். இவர் இந்தியா –சீனாவுக்கு இடையில் பல முறை பேச்சு வார்த்தையில் தலையிட்டு பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது நடைபெற்று வரும் பேச்சு வார்தைகள் கடந்த ஜுன் 6 ஆம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட எல்லைப் பகுதி ஒப்பந்தம் குறித்தது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. கடந்த மே 22 ஆம் தேதி இந்திய இராணுவம் எல்லைத் தாண்டி வருவதாகக் குற்றம் சாட்டி சீனா எல்லைப் பகுதியில் இராணுவத் துருப்புகளைக் குவித்தது. அதற்கு பின்பு பலக்கட்ட நெருக்கடிகள் ஏற்பட்டதால் ஜுன் 6 ஆம் தேதி பேச்சு வார்தையில் முடிவு எட்டப்பட்டு இருநாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுக் கொண்டன. மேலும் எல்லையில் தொடரும் சிக்கலை தீர்ப்பதற்காக இரு நாடுகளும் காப்பு மண்டலங்களை (Buffer Zone) உருவாக்குவது குறித்தும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப் பட்டு இருந்தது என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு இருந்தது. அப்படி வரையறுக்கப் பட்ட காப்பு மண்டலங்களைத் தாண்டி சீனாவின் துருப்புகள் இருந்தது என்றும் அதை அகற்றுவதற்காக ஜுன் 15 ஆம் தேதி இந்திய இராணுவத்தினர் சீன இராணுவத்தினருடன் மோதியதாகவும் கூறப்படுகிறது.

கல்வான் தாக்குதலால் ஏற்பட்ட பரபரப்பு இன்றுவரை முடிவு எட்டப்படாத நிலையில்தற்போது இராணுவ கமெண்டர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நேற்று வரை நடைபெற்ற பேச்சு வார்தையில் எந்த இறுதியான முடிவும் எடுக்கப்பட வில்லை என்றே செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பாங்காங் ஏரிப் பகுதியில் இருநாடுகளும் படைகளை குவித்து இருக்கின்றனர். இராணுவ கமெண்டர்கள் சார்பில் இந்தப்பதட்டத்தை தணியவைக்க தொடர்ந்து பேச்சப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலும் கல்வான் தாக்குதல் குறித்து சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி தலைமையில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.