மற்றொரு விஷவாயுக்கசிவு சம்பவம்… 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு!!!

  • IndiaGlitz, [Thursday,January 07 2021]

 

ஒடிசா மாநிலத்தின் ரூர்கேலா உருக்காலை நிறுவனத்தில் நேற்றுக் காலை பயங்கர விஷவாயு கசிவு ஏற்பட்டு உள்ளது. இந்த விபத்தில் 4 ஊழியர்கள் உயிரிழந்து உள்ளனர். மேலும் 6 பேர் படுகாயத்துடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. பொதுத்துறை நிறுவனமான இந்திய உருக்காலை ஆணையத்தின்கீழ் இயங்கி வரும் ரூர்கேலா (செயின்) நிறுவனத்தில்தான் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.

உருக்காலையில் ஸ்டார்கன்ஸ்ட்ரக் ஷன் எனும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் நேற்று காலை பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தபோது விஷவாயு கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி 4 தொழிலாளர்கள் உயிரிழந்ததோடு மேலும் 6 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் உருக்காலையில் எதனால் விபத்து ஏற்பட்டது என்பது குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த உயிரிழப்புக்கு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தனது டிவிட்டரில் வருத்தம் தெரிவித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.