கோவை டூ லண்டன். காரில் செல்லும் தில் பெண்மணிகள்
- IndiaGlitz, [Thursday,December 01 2016]
அண்டை நாடுகளுக்கு செல்வதாக இருந்தால் கூட விமானத்தில் பயணம் செய்து வரும் இந்த காலத்தில் கண்டம் விட்டு கண்டம் அதாவது கோவையில் இருந்து லண்டனுக்கு நான்கு பெண்கள் காரில் செல்லும் தில்லான முடிவை எடுத்துள்ளனர்.
கோவையை சேர்ந்த மீனாட்சி அரவிந்த் என்ற பெண், உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு காரில் பயணம் செய்வது என்பது மிகவும் பிடித்த விஷயம். இவர் ஏற்கனவே தாய்லாந்துக்கு காரில் சென்று வந்துள்ள அனுபவம் உள்ளதால் அடுத்ததாக லண்டனுக்கு காரில் செல்ல திட்டமிட்டுள்ளார்.
இந்த திட்டத்திற்கு அவருடைய நெருங்கிய தோழிகள் மூவர் ஊக்கம் அளித்ததோடு அவர்களும் மீனாட்சியுடன் லண்டன் செல்லவுள்ளனர்.
வரும் 2017 மார்ச் மாதம் 26ஆம் தேதி கோவையில் இருந்து காரில் கிளம்பும் இந்த நான்கு பெண்மணிகள் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர தினத்தில் லண்டன் சென்றடைவர். இந்த பயணத்தின் நடுவே பெண்ணுரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் பயணத்தின் இடையே கிரண்பேடி, மேரிகோம் ஆகியோர்களை சந்திக்க திட்டமிட்டுள்ள இவர்கள் லண்டன் பிரதமர் தெரசே மே அவர்களையும் சந்திக்கவுள்ளனர்.
கார் ஓட்டவும், காரில் பழுது ஏற்பட்டால் அதை சரிசெய்யவும் திறமை பெற்ற இந்த நான்கு பெண்கள் நாள் ஒன்றுக்கு 500 கிமீ வரை பயணம் செய்யவுள்ளனர். இந்த பயணத்தின் மொத்த தூரம் 24000 கிமீ ஆகும். இந்த பயணத்திற்கு சுமார் 60 லட்சம் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.