ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிப்பெற்ற அணிகள் எது? ஐபிஎல் இறுதிப்போட்டி எப்போது?
- IndiaGlitz, [Saturday,October 09 2021] Sports News
கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் 2021 தொடரின் போட்டிகள் தற்போது அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு டெல்லி, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய அணிகள் தகுதிப் பெற்றுள்ளன.
இதில் கடந்த இருமுறை சாம்பியன் பட்டம் பெற்ற மும்பை இந்தியன்ஸ் கடைசிவரை போராடியும் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற முடியவில்லை. ஆனால் தகுதிச்சுற்றுக்கு பலமுறை முயற்சித்து வந்த கொல்கத்தா 14 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்தில் தற்போது பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிப் பெற்றிருக்கிறது.
ப்ளே ஆஃப் சுற்றில் இடம்பிடித்துள்ள மொத்தம் 4 அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் நடைபெறும். அதாவது புள்ளி அடிப்படையில் முதல் இடத்தைப் பிடித்துள்ள டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சென்னை சிஎஸ்கே ஆகிய இரு அணிகளும் முதல் குவாலிஃபையர் சுற்றில் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி விளையாடும். இதில் வெற்றிப்பெற்ற அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெறும். மாறாக தோற்ற அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.
அடுத்து எலிமினேட்டர் போடியில் புள்ளிப் பட்டியலில் இரண்டாவதாக உள்ள கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் வரும் அக்டோபர் 11 ஆம் தேதி மோதவுள்ளன. இதில் தோற்றுப்போகும் அணி ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலக வேண்டியிருக்கும். வெற்றிப்பெற்ற அணி முதல் குவாலிபையர் ரவுண்டில் வெற்றிப்பெற்ற அணியுடன் 2ஆவது குவாலிஃபையர் ரவுண்டில் விளையாட வேண்டும்.
2 ஆவது குவாலிஃபையர் போட்டி வரும் அக்டோபர் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிப்பெறும் அணி மட்டுமே இறுதிப்போட்டியில் விளையாட முடியும். ஐபிஎல் 2021 தொடருக்கான இறுதிப்போட்டி வரும் அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் வெற்றிப்பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது.