ஊரடங்கால் பசி பட்டினி: ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை

தெலுங்கானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஊரடங்கு காலத்தை சமாளிக்க முடியாமல், கையில் பணம் இல்லாததால் தற்கொலை செய்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் மீர்பட் என்ற பகுதியில் ஸ்வர்னாபாய் என்ற 55 வயது பெண்ணும் அவரது மகன் ஹரிஷ், கிரிஷ் மற்றும் மகள் ஸ்வப்னா ஆகிய நால்வரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளனர். இந்த குடும்பத்தில் 23 வயது கிரிஷ் மட்டுமே தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் மற்ற மூவரும் வேலையின்றி இருப்பதால் ஏற்கனவே கடனில் இருந்ததாகவும், தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த குடும்பத்தினர் வறுமையிலும் பசியாலும் வாடியதால் தற்கொலை முடிவை எடுத்திருப்பதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை குறித்த செய்தியை கேட்டவுடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், தற்கொலைக்கு முன் குடும்பத்தினர் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றினர். மேலும் இந்த குடும்பத்தினர்களுக்கு என்ன பிரச்சனை என்பது குறித்து அவர்களுடைய உறவினர்களிடம் விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது.

ஏற்கனவே மே 3ஆம் தேதிக்கு பின்னரும் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் கொரோனா பிரச்சனை முடிவடைந்தாலும், அதன் பிறகு ஏற்பட போகும் இதுபோன்ற பாதிப்புகள் இப்போதே கலக்கத்தை ஏற்படுத்துகின்றன என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்,.