கொரோனாவால் நிரம்பி வழியும் சென்னை மருத்துவமனைகள்… நிலவரம் என்ன?
- IndiaGlitz, [Thursday,May 13 2021]
கொரோனா நோய்த்தொற்றின் முதல் அலை காலத்தில் ஒட்டுமொத்த தமிழகத்திலும் அதிகபட்சமாக தினம்தோறும் 7 ஆயிரம் புதிய பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனால் தற்போது இரண்டாவது அலையில் தமிழகம் முழுக்க தினம்தோறும் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைத் தாண்டியும் அதுவும் சென்னையில் மட்டுமே தினம்தோறும் 7 ஆயிரத்தை தாண்டி புதிய பாதிப்புகளும் ஏற்பட்டு வருவது கடும் பீதியை கிளப்புகிறது.
இதனால் சென்னையில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் தற்போது கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. அதோடு சென்னை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை இல்லாமல் தினம்தோறும் கொரோனா நோயாளிகள் சென்னையை நோக்கி படையெடுக்கவும் துவங்கி விட்டனர்.
இதனால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு முன்னால் தினம்தோறும் 30 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டு இருக்கிறது. இப்படி காத்திருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு உடனே படுக்கை வசதிகளும் கிடைப்பதில்லை. காரணம் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 4,368 படுக்கைகள் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் 2,000 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் காணப்படுகிறது.
ஆனால் இந்த படுக்கைகளில் ஏற்கனவே கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதால் பக்கத்து மாவட்டங்களில் இருந்துவரும் நோயாளிகளுக்கு உடனே படுக்கை கொடுக்க முடியாமல், ஆம்புலன்ஸ்க்கே சென்று மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வகையில் நேற்று மட்டும் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு 25 கொரோனா நோயாளிகள் புதிதாக வந்துள்ளனர்.
இப்படி வந்த நோயாளிகளுக்கு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் உடனடியாக படுக்கை வசதி கிடைக்காமல் கிட்டத்தட்ட 4 மணிநேரம் அவர்கள் ஆம்புலன்ஸிலேயே காத்து இருந்ததாகவும் அவர்களுக்கு மருத்துவர்கள் ஆம்புலன்ஸில் வைத்து சிகிச்சை அளித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் 4 மணிநேர காத்திருப்புக்குப் பின் 25 கொரோனா நோயாளிகளில் 4 பேர் உயிரிழந்து விட்டதாகத் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
இப்படி சென்னை மருத்துவமனைகளில் தற்போது ஏற்பட்டு இருக்கும் படுக்கை பற்றாக்குறை காரணமாக தமிழக அரசு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வணிக வளாகத்தில் புதிதாக 1000 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனையை அமைத்து வருகிறது. இதில் 800 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் இருப்பதாகக் கூறப்படும் நிலையில் முதற்கட்டமாக 400 படுக்கைகள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால் நேற்று 4 கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸிலியே உயிரிழந்ததால் சம்பத்தை அடுத்து நந்தம்பாக்கம் கொரோனா சிகிச்சை மையத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.