இன்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்குவதால் பரபரப்பு

தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனாவின் பாதிப்பு 3000ஐ தாண்டிய நிலையில் இன்று 4000ஐ நெருங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறையின் தகவலின்படி தமிழகத்தில் இன்று 3940 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,275 என அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதனையடுத்து சென்னையில் மொத்தம் 53762 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னைக்கு அடுத்தபடியாக உச்சபட்சமாக மதுரையில் 284 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 183 பேருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 114 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவால் 54 பேர் மரணம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1079 ஆக அதிகரித்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி ஆகும். கொரோனாவால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1000ஐ முதல்முறையாக தாண்டியுள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 1,443 பேர் குணமடைந்துள்ளனர் என்பது தான் ஒரே ஆறுதல் என்பதும், இதனையடுத்து பேர் மொத்தம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 45,537 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று தமிழகத்தில் 32,948 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 11,10,402 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.