ம.பி.யில் நடந்த பயங்கரம்… பேருந்து கவிழ்ந்து 32 பேர் உயிரிழப்பு!
- IndiaGlitz, [Tuesday,February 16 2021]
மத்தியப் பிரதேசத்தில் சாலையில் சென்று கொண்டு இருந்த பேருந்து ஒன்று, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்ததால் பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த விபத்தில் சிக்கிய 32 பேர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் இந்த பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
இன்று அதிகாலை 7.30 மணிக்கு சதி எனும் இடத்தில் இருந்து சாட்னா எனும் இடத்திற்கு சென்று கொண்டு இருந்த அரசு பேருந்தில் 54 பேர் பயணம் செய்துள்ளனர். இந்தப் பேருந்து பாட்னா எனும் கிராமத்திற்கு அருகே சென்று கொண்டு இருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கால்வாயில் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதில் பயணம் செய்த 32 பேர் தற்போது சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர்.
மேலும் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணி நடைபெற்று வரும் நிலையில் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த விபத்திற்கு கடும் வருத்தம் தெரிவித்த அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உயிரிழந்தோரின் குடும்பத்திறகு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்து இருக்கிறார். மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
அதேபோல இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி பிரதமர் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். கடந்த 7 ஆம் தேதி உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய நூற்றுக் கணக்கானோரில் இதுவரை 58 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. மேலும் நேற்று முன்தினம் மகாராஷ்டிராவில் டிரக் ஒன்று கவிழ்ந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் ம.பி.யில் மேலும் 32 பேர் உயிரிழந்து இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.