ஒரே இரவில் 20 வருடத்தை மறந்த நபர்: நிஜத்தில் ஒரு 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்'

  • IndiaGlitz, [Wednesday,July 28 2021]

அமெரிக்காவைச் சேர்ந்த 37 வயதான நபர் ஒருவர் ஒரே இரவில் 20 வருட வாழ்க்கையை மறந்து விட்டதாகவும் தற்போது அவர் 16 வயது பள்ளிச் சிறுவன் போல் செயல்படுவதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு கிரிக்கெட் விளையாடும்போது காயம் ஏற்பட்டு, அதன் காரணமாக திடீரென அவர் பழைய நினைவுகளை மறந்து விடுவார். அதேபோல் அமெரிக்காவை சேர்ந்த டேனியல் பீட்டர் என்ற 37 வயது நபர் தூங்கி எழுந்ததும் தான் 16 வயது சிறுவன் போல உணர்ந்தாராம். தனக்கு திருமணமாகி பத்து வயதில் ஒரு மகள் இருப்பதையும் மறந்து அவர் செயல்பட்டது அவரது குடும்பத்தினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது

அவரது மனைவியையும் மகளையும் பார்த்து நீங்கள் யார்? என்று கேட்டு அதிர்ச்சி அடைந்த செய்திருக்கிறார். முதலில் விளையாட்டுத்தனமாக தனது கணவர் ஏதோ சொல்கிறார் என்பதை நினைத்துக் கொண்ட மனைவி அதன்பின் சீரியஸை உணர்ந்து மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது அவருக்கு டிரன்சியண்ட் குளோபல் அம்னீஷியா என்ற நோய் தாக்கி இருப்பது தெரியவந்தது

நன்றாக தூங்கினால் போகப் போக சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில் தற்போது ஒரு ஆண்டுக்கு மேலாகியும் டேனியலுக்கு இன்னும் பழைய நினைவுகள் திரும்பவில்லை என்று அவரது மனைவி மிகுந்த வருத்தத்துடன் கூறுகிறார். இந்த நிலையில் தனது கணவரை அவர் இன்னொரு குழந்தையாகவே பாவித்து வருவதாகவும் தற்போது அவர் செய்யும் குழந்தைத்தனமான செயல்களை ரசிக்கத் தொடங்கி விட்டதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் டேனியலுக்கு கடந்த சில வருடங்களாக பொருளாதார நெருக்கடிகள் இருந்ததாகவும் அதனால் மன உளைச்சல் இருந்ததாகவும் அது மட்டுமின்றி அவருக்கு முதுகு தண்டுவடத்தில் பிரச்சனை இருந்ததாகவும், இதனால் அவருக்கு மறதி நோய் தாக்கி இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். தனது கணவர் விரைவில் முன்புபோல் பழைய மாதிரி நிச்சயம் மாறிவிடுவார், அவருக்கு நினைவு திரும்பிவிடும் என்று அவரது மனைவி நம்பிக்கையுடன் கூறி வருகிறார்.